கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் பதவியேற்றார். இந்நிலையில் டி.ஐ.ஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. உயர்பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகம் முழுவதும் உள்ள காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையால் டிஐஜி விஜயகுமார் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த இரண்டு நாட்களாக தூக்கம் வராமல் மனஉளைச்சல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர், கடந்த 2009-ல் ஐபிஎஸ் முடித்த நிலையில், காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணியாற்றி இருக்கிறார். மேலும், டிஐஜி விஜயகுமார், சென்னை துணை ஆணையராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.