நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி..!

Advertisements

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டுவரவும், இந்து ராஷ்டிரமாக உருவாக்கவும் கோரி போராட்டம் வெடித்துள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் குவிந்த போராட்டக்காரர்களுக்கும் நேபாள பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. மன்னராட்சி மற்றும் இந்து ராஷ்டிரத்துக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி  மற்றும் பிற குழுக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நம் அண்டை நாடான நேபாளம் இமயமலை அடிவாரத்தில் உள்ளது. நமக்கும், நம் அண்டை நாடான சீனாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ள நேபாள நாட்டின்  பிரதமராக ஷர்மா ஒலி  இருந்து வருகிறார்.  குறிப்பாக  அந்நாட்டில்  17 ஆண்டுகளில் ஒரு பிரதமர் கூட ஐந்து ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்ததில்லை என்பது  கவலை அளிக்க கூடிய  ஒன்றாகும். அரசியல் கூட்டணி குழப்பம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, 17 ஆண்டுகளில், 13 பிரதமர்களை நேபாளம் கண்டுள்ளது. தற்போதைய பிரதமர் ஷர்மா ஒலியின் ஆட்சியிலும் அந்நாட்டு மக்கள்  திருப்தியடையவில்லை. மன்னராட்சி கோரி தொடரும் போராட்டத்தால்  நேபாள வீதிகளில் ராணுவம் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளது. எனவே, அங்கு மீண்டும் மன்னராட்சியை கொண்டு வர வலியுறுத்தி பல்வேறு தரப்பினர், கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். போலீசாரின் தடுப்புகளை மீறி சென்றவர்களை, பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால்  போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.  இதனால், அப்பகுதியே போர்க்களமாக மாறியது. இந்த மோதலில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலைநகர் உட்பட நாடு முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டு கால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாள நாடு  அதிகாரபூர்வமாக  மன்னராட்சியின் கீழ் இந்து ராஷ்டிரமாக இருந்து வந்தது. ஆனால் பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயக குடியரசாக நேபாள நாடு  மாறியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார். தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீது நேபாள மக்களுக்கு உள்ள அதிருப்தியால்  முன்னாள் மன்னர் மீது பெரிய அளவிலான ஆதரவு பெருகியது. இதன் உச்சமாக தற்போது அவரது ஆதரவு குழுக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. உலக வரலாற்றில் மன்னராட்சியை ஒழிக்க உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துள்ளன, நடந்துவரும் நிலையில் மக்களாட்சியை ஒழித்து மன்னராட்சியை கொண்டு வர நேபாளத்தில் போராட்டம் நடைபெற்று வருவதாக  விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *