சாக்குமூட்டையில் இளைஞரை கட்டி வீசிய கொடூரம்!

ஶ்ரீவில்லிபுத்தூர்:

ஶ்ரீவில்லிபுத்தூர் சந்தைபேட்டை தெருவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்பவரைக் கொலை செய்த கும்பல், அவரது உடலைச் சாக்கு பையால் மூடிச் சாலையில் போட்டு விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் எதிரே உள்ள சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ்(45). இவருக்குத் திருமணமாகவில்லை. வங்கியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய பிரகாஷ்ராஜ், தற்போது கிடைத்த வேலைக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் சந்தைபேட்டை தெருவில் சாக்கு பையால் மூடிய நிலையில் பிரகாஷ்ராஜ் தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பிரகாஷ்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சம்பவ இடத்தில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இக்கொலை சம்பவம்குறித்து ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இக்கொலை தொடர்பாக இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *