இந்தியா-இலங்கை உறவை வலுப்படுத்தும்- எல்.முருகன்!

Advertisements

புதுடெல்லி:

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் உதவியால் கலாசார மையம் கட்டப்பட்டது. இந்தக் கலாசார மையத்துக்குப் பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்தக் கலாசார மையம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு நேற்று திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்வுகுறித்த புகைப்படங்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து இருந்தது. யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்குத் திருவள்ளுவர் பெயர் சூட்டியதை பிரதமர் மோடி பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மையத்துக்குத் திருவள்ளுவர் பெயர் சூட்டி இருப்பதை மத்திய மந்திரி எல்.முருகன் பாராட்டி உள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

நமது அண்டை நாடான இலங்கையில், மத்திய அரசின் நிதியுதவி கொண்டு அமைக்கப்பட்ட ‘யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு’, உலகப் பொதுமறையான திருக்குறள் தந்த ‘தெய்வப்புலவர்’ அய்யன் திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘யாழ்ப்பாணம் கலாசாரம் மையம்’ திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன்.

பல்வேறு விதமான நவீன வசதிகளுடனும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான உறவைக் குறிக்கின்ற வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கல்வெட்டுகள் மற்றும் பழங்கால படிமங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கலாசார மையத்திற்கு, தற்போது அய்யன் வள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகுந்த பொருத்தமானதாக அமைந்துள்ளது.

மேலும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான கலாசார உறவானது வலுப்பெறும் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் தொன்மையான, இனிமையான மொழி தமிழ் என்பதை உலகம் முழுவதும் சென்று உரக்கச் சொல்லி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழுக்காக ஆற்றி வரும் பணிகள் அளப்பரியது.

அதுபோலவே திருக்குறளையும், அய்யன் திருவள்ளுவரின் புகழையும் உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகர் உள்ளிட்ட வெளிநாடுகளில் திருவள்ளு வருக்கு சிலை வைத்தும், ஐ.நா. சபை போன்ற உல கின் மாபெரும் அரங்குகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கிய வரிகளையும் குறிப்பிட்டு பிரதமர் மோடி பெருமைப்படுத்தினார்.

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை, மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாகத் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க. கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்துத் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

கொடுத்த வாக்குறுதி யின்படி உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார்.

தற்போது இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *