
வார ராசிப்பலன்
அக்டோபர் 15 முதல் 21 வரை 2023
புரட்டாசி 26 முதல் ஜப்பசி 4 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
18.10.2023 ஐப்பசி 01 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை
20.10.2023 ஐப்பசி 03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை
மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )

எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், வரும் புதன் கிழமை முதல் 7-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும்.
கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய நேரமாகும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆண்டுக் கோளான குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 5–ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பெண்கள் மூலமாக ஒரு சில அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைக்கவும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட்டால் ஏற்படும் சிறுசிறு நெருக்கடிகளை சமாளிக்க முடியும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும்.
வேலைக்கு செல்பவர்கள் மற்றவர்கள் பணியையும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் எவ்வளவு நெருக்கடியையும் எளிதில் சமாளிக்க முடியும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 15, 16.
சந்திராஷ்டமம் – 17-10-2023 பகல் 02.20 மணி முதல் 19-10-2023 இரவு 09.03 மணி வரை.
ரிஷபம் ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )

பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் ராசியாதிபதி சுக்கிரன், ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு உண்டு.
குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கடந்த கால பொருளாதார நெருக்கடிகள் எல்லம் இருந்த இடம் தெரியாமல் மறையும். சமுதாயத்தில் மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு உயர்வான நிலையினை எட்டும் வாய்ப்பு அமையும். உங்களுக்கு இருந்த உடம்பு பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகும். நீண்ட நாட்களாக உள்ள மனக்குறைகள் எல்லாம் விலகி எதிலும் நிம்மதியுடன் செயல்பட முடியும்.
வரும் புதன்கிழமை முதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய லாபங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல், வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் தொடர்பான விஷயங்களை வெளி நபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.
வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக மறைந்து மனநிம்மதியுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 15, 16, 17, 18, 19.
சந்திராஷ்டமம் – 19-10-2023 இரவு 09.03 மணி முதல் 22-10-2023 அதிகாலை 01.38 மணி வரை.
மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )

எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் அனுகூலங்களை வரும் நாட்களில் அடைய முடியும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும்.
5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது உணவு விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. பங்காளிகளிடம் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் நிம்மதியுடன் இருக்க முடியும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் நேரம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைகளுக்கு வரும் நாட்களில் தீர்வு ஏற்பட்டு மன நிம்மதியுடன் தொழிலை நடத்த முடியும்.
வேலையாட்களால் இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறையும். தொழிலை விருத்தி செய்யவேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வேலையில் உங்களுக்கு இருந்த தேவையற்ற வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் பணியாற்ற முடியும்.
அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் ஒரிரு மாதங்களில் உயர்வான நிலையை அடைய முடியும். சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது, அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 18, 19, 20, 21.
கடகம் ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )

நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், பிரதான கிரகங்களான குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி, பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. பொருளாதார ரீதியாக மிகவும் சிறப்பான பலன்கள் ஏற்படும்.
நவீனகரமான பொருட்களை குடும்பத்திற்காக வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வார தொடக்கத்தில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் எல்லாம் வருகின்ற நாட்களில் நல்ல முடிவு கிடைக்கும். பூர்வீக சொத்து வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி லாபகரமான பலன்களை எட்ட முடியும்.
தொழில் வளர்ச்சிக்காக அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை நீங்கள் தற்போது அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் பதவி உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைய முடியும். நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறும். செவ்வாய், கேது 4-ல் இருப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது சட்ட விதிக்கு உட்பட்டு நடப்பது நல்லது.
அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் இருந்தாலும் எதையும் சமாளிக்க முடியும். முருகனுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 20, 21.
சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )

தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நிலவிய கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். தற்போது 2-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் புதன்கிழமை முதல் 3-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ள சிறுசிறு பிரச்சினைகள் எல்லம் விலகி மன நிம்மதியும் பொருளாதார அனுகூலங்களையும் அடைவீர்கள்.
குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து நல்ல வளர்ச்சியினை அடைவீர்கள்.
நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்து மன நிம்மதி அடைய முடியும். தொழிலை மேன்மைப்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனைத் தரும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகுவதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் படிப்படியாக குறையும்.
கடன்கள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் வரும் நாட்களில் அமையும். சக ஊழியர்களின் ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். சர்பேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் – 15, 16.
கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8–ல் குரு சஞ்சரிப்பதாலும் 6-ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் வரும் புதன்கிழமை முதல் 2-ல் சஞ்சரிப்பதாலும் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. நீங்கள் நல்ல எண்ணத்துடன் பேசினாலும் அதனை உடனிருப்பவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் முடிந்தவரை பேச்சைக் குறைத்துக் கொள்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, குடும்ப உறுப்பினர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்காது. நியாயப்படி உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கூட போட்டிகள் காரணமாக தட்டிப் போகும்.
இருக்கும் வாய்ப்புகளை முடிந்தவரை தற்காத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருப்பதால் ஓய்வு நேரம் குறையும். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ளக்கூடிய நிலையும், அதன் மூலம் வீண் விரயங்களும் ஏற்படும். துர்க்கையம்மனை வழிபடுவது, முருகப்பெருமானை தரிசிப்பதன் மூலம் நல்லது நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள் – 18, 19.
துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )

வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 12 மற்றும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் பொறுமையை கடைப்பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குரு வக்ர கதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்பட்டால் இருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும்.
சுக்கிரன் 11–ல் சஞ்சரிப்பதால் கடந்தகால அலைச்சல்கள் குறையும் என்றாலும் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். மறைமுகப் போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். அரசு அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். சனி 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதும், சூரிய நமஸ்காரம் செய்வதும் உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் – 15, 16, 20, 21.
விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )

முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் பகலவனை கண்ட பனி போல படிப்படியாக விலகி சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் யோகம், கடந்த காலங்களில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக விலக கூடிய ஒரு அதிர்ஷ்டம் இவ்வாரத்தில் உண்டு. வார தொடக்கத்தில் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களை போட்டு அதில் வெற்றி காண்பீர்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த அரசு உத்தரவுகளை விரைவில் அடையக்கூடிய அதிர்ஷ்டம் உண்டு.
நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள். பயணங்கள் மூலமாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். ஜென்ம ராசிக்கு 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் எவ்வளவு கடினமான வேலையையும் சிறப்பாக கையாள்வீர்கள்.
நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு அர்ச்சனை செய்வது, ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19.
தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் லாப ஸ்தானமான 11–ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும்.
இருக்கிற இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் மேலோங்கும். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதார ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி கடந்த கால கடன்களை பைசல் செய்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி மனநிம்மதி ஏற்படும்.
தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவது மட்டுமில்லாமல் சிலருக்கு ஒரு பெரிய இடத்து நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக உள்ள சிக்கல்கள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். அரசு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம் எளிதில் நிறைவேறும். நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளைப் புரிவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்களைப் பெற முடியும்.
மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் கடினமான செயலைக் கூட எளிதில் முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாரத்தில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, பிரித்தியங்கரா தேவியை தரிசிப்பதன் மூலம் உங்கள் சங்கடங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் – 15, 16, 20, 21.
மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)

மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், குரு வக்ரம் பெற்று சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக சிறப்பான பலனை அடைவீர்கள்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். கடந்த கால தேவையற்ற இடையூறுகள் எல்லாம் விலகி உயர்வான நிலையினை எட்ட முடியும். மாதக் கோளான சூரியன், புதன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும்.
பொருளாதார நெருக்கடிகள் விலகி லாபங்களை எட்ட முடியும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். பூர்வீக சொத்து ரீதியாக நீண்ட நாட்களாக தீராத பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வரும். வேலைக்கு செல்பவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் பெரிய பணியை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, சிறு பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொள்வது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது நிதானத்தோடு செல்வது நல்லது.
குறிப்பாக உறவினர்கள் வழியில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 15, 16, 17, 18, 19.
கும்பம் ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )

உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொருளாதார ரீதியாக அனுகூலங்களும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்கள் எல்லாம் எளிதில் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும்.
செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களை போட்டு அதன்மூலம் லாபங்களை அடைவீர்கள். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் புதன் கிழமை முதல் 9-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் வருகின்ற நாட்களில் வருவதால் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் காப்பாற்றி உங்களுக்கிருந்த கடன்களை குறைப்பீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணியை கூட சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு கௌரவமான வேலை வாய்ப்பு அமையும்.
உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது சட்ட விதிக்கு உட்பட்டு நிதானத்தோடு செல்வது நல்லது. மேலும் வளமான பலன்களை பெற சிவ வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 18, 19, 20, 21.
மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )

மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்து கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு தற்போது வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். 12-ல் சஞ்சரிக்கும் சனி தற்போது வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் அதனை சமாளிக்கும் பலம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் ஒரு சில அனுகூலங்கள் உண்டு.
தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை நம்பாமல் நீங்கள் முன்னின்று செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட்டால் தக்க நேரத்தில் தொழிலில் அவர்கள் செய்யும் முதலீடுகள் மூலம் தொழிலில் உள்ள பொருளாதரா நெருக்கடிகளை குறைக்க உதவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் அதற்கான பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. துர்கையம்மனை தரிசிப்பது, வெங்கடாஜலபதி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 20, 21.
சந்திராஷ்டமம் – 15-10-2023 அதிகாலை 05.20 மணி முதல் 17-10-2023 பகல் 02.20 மணி வரை.



