
தொடக்கக் காலத்தில் புவியில் நீர்ப்பரப்புத் தவிர நிலப்பரப்பெங்கும் காடுகளே செழித்தோங்கி இருந்தன. பயிர்த்தொழில், வீடு கட்டுமானம், அறைகலன்கள் செய்தல், சாலை அமைத்தல் ஆகியவற்றுக்காகக் காட்டில் உள்ள மரங்கள் வெட்டியழிக்கப்பட்டன.
புதிய மரங்களை நட்டு வளர்க்காதது, ஆண்டுதோறும் மழைப்பொழிவு குறைந்தது, மண், மணல், மலை, பாறை ஆகியவற்றை வெட்டிக் கடத்தியது எனத் தொடர்ந்த சுரண்டல்களால் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் காடுகள் அடங்கிய பசுமைப் பரப்பு உத்தம அளவான 33 விழுக்காட்டுக்கும் குறைந்து போனது.
காரைக்குடி, கல்லல், குருந்தம்பட்டு, ஆலம்பட்டு, விளாவடியேந்தல் என்று ஊர்ப்பெயர்களே மரத்தின் பெயரால் அமைந்துள்ளதைக் கூர்ந்து நோக்கினால், அந்த ஊர்களில் முன்பு அவ்வகை மரங்கள் வளர்ந்து செழித்திருந்ததை அறியலாம்.
தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காகப் பல்வேறு மரங்கள் வளர்ப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுவாகக் காடுகளிலும், சாலையோரங்களிலும், நீர்நிலைகளின் ஓரங்களிலும் பட்டமரங்களையும், கருவேல மரங்களையும் மட்டுமே வெட்டியெடுக்க ஏலம் விடப்படுகிறது.
இதைச் சாக்காக வைத்துக்கொண்டே சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம்,கல்லல் ஒன்றியத்தில் உள்ள ஆலம்பட்டு, விளாவடியேந்தல் ஊராட்சிகளில் கண்மாய்கள், மேய்கால் புறம்போக்கு நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்ட 4 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய்க்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது.
ஏலம் எடுத்தோர், செட்டியான், பனையடி, கொல்லன், சொக்கரெண்டி, அரண்மனை, தட்டான் ஆகிய கண்மாய்க் கரைகளில் உள்ள வேம்பு, புளி, வாகை உள்ளிட்ட 120 நாட்டுப் பசுமை மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளனர்.
இதன் மதிப்பு பல இலட்சம் ரூபாய் என்று கூறப்பட்டாலும், பல பத்தாண்டுகளாக வளர்க்கப்பட்ட இத்தகைய மரங்களை மீண்டும் வளர்க்கக் காலம், மழைப்பொழிவு, பணச்செலவு, உழைப்பு என அத்தனையையும் கணக்கிட்டால் இப்போதுள்ள அரசால் இனி முடியவே முடியாது.
சீமைக் கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஏலம் எடுத்துவிட்டுப் பயன்தரும் பச்சை மரங்களை வெட்டுவதற்கு இவர்களுக்குத் துணிச்சல் எப்படி வந்தது? ஆலம்பட்டு முன்னாள் ஊராட்சித் தலைவர் அசோகன், துணைத் தலைவர் ராசு, சின்னராசு ஆகியோரும், கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர், காரைக்குடி வட்டாட்சியரும் மரங்களை வெட்டிக் கடத்திப் பசுமைப் பரப்பை அழித்தவருக்குத் துணைபோனதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


