வேலு நாச்சியார் பிறந்தநாளையொட்டி பனையூரில் மரியாதை செலுத்திய தவெக விஜய்!

Advertisements

சென்னை:

வேலுநாச்சியார் பிறந்த நாளான இன்று பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளார் தவெக தலைவர் விஜய். வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த நாளில் பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளியெனப் போற்றப்படும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்திப் போராடியவர் வேலு நாச்சியார். வேலுநாச்சியார் பிறந்த நாளான இன்று வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்.

வேலு நாச்சியாருக்கு விஜய் மரியாதை:

தவெக தலைவர் விஜய், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

தவெக கொள்கைத் தலைவி:

முன்னதாக, மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

தவெக கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக, வீரமங்கை வேலுநாச்சியாரும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். அவரை அரசியல் வழிகாட்டியாகவும் தமிழக வெற்றிக் கழகம் ஏற்றுக்கொண்ட நிலையில், வேலு நாச்சியாருக்கு இன்று விஜய் மரியாதை செலுத்தி இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம்:

தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டு மேடையின் பக்கவாட்டில் வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், காமராஜர், பெரியார் ஆகியோரின் பிரமாண்ட கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும் ராணி சக்கந்தி முத்தாத்தாளுக்கும் 1730 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தவர் வேலுநாச்சியார். ஆண் வாரிசு இல்லாததால் ஆண் பிள்ளை போலவே வீர தீரத்துடன் வளர்க்கப்பட்டார். வாள் வீச்சு, வில் அம்புப் பயிற்சி, சிலம்பம், வளரி எரிதல், குதிரை ஏற்றம் எனப் போர் பயிற்சிகள் அனைத்தும் கற்றதுடன் பல மொழிகளையும் கற்றறிந்தார் வேலு நாச்சியார்.

பின்னர், சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னரான முத்துவடுகநாததேவரை மணந்து சிவகங்கைச் சீமையின் ராணியானார். ஆங்கிலேயருக்குக் கப்பம் கட்ட மறுத்து, அவர்களுக்கு எதிரான போரில் கணவனையும் நாட்டையும் இழந்த நிலையில், தன்னம்பிக்கையோடு போராடி இழந்த மண்ணை மீட்டார். இந்திய அளவில் விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட முதல் பெண் போராளியாக வீரமங்கை வேலுநாச்சியார் கருதப்படுகிறார்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *