சென்னை விமான நிலையம் ஒரு வணிக நிறுவனம் அல்ல அது மக்களின் பொதுச்சொத்தாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் இடத்தில் வேறு ஒரு இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பது, தனியார்மயமாக்கும் முயற்சியாகும் என்று குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலையம் ஒரு வணிக நிறுவனம் அல்ல, அது தனிநபர் சொத்தல்ல, மக்களின் பொதுச்சொத்தாகும் என்று கூறியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும் அதைவிட்டு, விமான நிலையத்தை தனியார்மயமாக்குதல் அதற்கு தீர்வல்ல என்று தெரிவித்துள்ளது.
எனவே, விமான நிலையத்தை, தனியார் லாப நோக்கில் இயக்குவது என்பது, பயணிகள் சேவை தொடர்பான பிரச்சினை மட்டும் அல்ல, அது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சரக்கு விநியோகச் சங்கிலியுடனும் தொடர்புடைய பிரச்சினையாகும் என்று கூறியுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்தை கிகிமி-யின் பொதுத்துறை நிர்வாகத்தின் கீழேயே நவீனப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.




