
வடலூர் சத்திய ஞான சபையில் 153 ஆவது தைப்பூச ஜோதி தரிசன விழாவைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார், வடலூரில் சத்திய ஞான சபையை 1872 அன்று நிறுவினார். அன்றைய தினம், முதல் ஜோதி தரிசனத்தையும் தானே முன்னின்று தொடங்கி வைத்தார். அன்று முதல் வடலூர் சத்திய ஞான சபையில் தை மாத பூச நட்சத்திர ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்தாண்டு 153-ஆவது தைப்பூச பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழாவை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு முதல் கால ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அப்போது கருப்பு, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்புத் திரை ஆகிய 7 திரைகளை விளக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது அப்போது, அங்கு குவிந்திருந்த சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகா மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனத்தை இரு கை கூப்பி வணங்கினர்.
தொடர்ந்து காலை 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, மற்றும் இரவு10 மணி ஆகிய ஆறு முறை ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது. இதேபோல தொடர்ந்து நாளை அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது. ஜோதி தரிசன விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில், இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடலூரில் குவிந்ததனர்.
