
தமிழகத்தையே உலுக்கிய வாச்சாத்தி பாலியல் வன்முறை சம்பவம் திரைப்படமாக எடுக்க உள்ளதாகவும், படத்தை நடிகை ரோகிணி இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கும் வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்களைப் பதுக்கி வைக்கபட்டதாகக் கூறி, அந்தக் கிராமமே அழிக்கப்பட்டது. 1992ம் ஆண்டு வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறையினரால் சோதனை நடத்தப்பட்ட கிராமத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இளம்பெண்களை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கிராமத்தில் உள்ள ஆண்களை விடிய விடியக் கட்டிப்போட்டு அடித்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்தக் கொடூர சம்பவம்குறித்த விசாரணை 1995ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் இந்திய வனத்துறையை சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 155 வனத்துறையினர், 108 போலீசார், 6 வருவாய்த்துறை அதிகாரிகள் என மொத்தமாக 269 பேர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வாச்சாத்தி வன்முறை தொடர்பாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன், 2011ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் தீர்ப்பு வழங்கியதில். அதில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும், எஞ்சிய 200க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில், தண்டனை பெற்ற வனத்துறை அதிகாரிகளான பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.



