பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உத்தண்டி கண்டிகை அருகே பொன்னேரி-மீஞ்சூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகை பகுதியில் தனியார் கண்டெய்னர் யார்டு முனையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு பொன்னேரி-மீஞ்சூர் டி.எச். சாலையில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரம் லாரிகள் செல்வதற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சாலையின் குறுக்கே மழை நீர் கால்வாய் செல்வதால் அது அடைபட்டு அருகில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் எனவும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும் என்றும் கூறி அப்பகுதி கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே இது தொடர்பாக விசாரிக்க அதே பகுதியை சேர்ந்த 2 பேரை மீஞ்சூர் போலீசார் அழைத்து சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உத்தண்டி கண்டிகை அருகே பொன்னேரி-மீஞ்சூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்பை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.