இரண்டு பெண்களைக் கொலை செய்துவிட்டு ஜாலியாகச் சுற்றித்திரிந்த வாலிபரைப் போலீசார் கைது செய்தனர்.அப்போது தப்பிக்க முயன்றபோது அந்தக் கொலையாளிக்கு காயம் ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதாகும் பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது மகளின் வீடான பொன்னாங்குப்பம் கிராமத்திற்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் தனது மகள் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரைத் தேடியுள்ளனர்.
அப்போது அதே பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் ஆடைகள் கலைக்கப்பட்டு இறந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். இந்தச் சம்பவம்குறித்து தகவல் அறிந்து வந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தான் கொல்லப்பட்ட பெண் அணிந்திருந்த நகைகள் திருபோனது தெரியவந்தது. நகைக்காக இவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையெ டிசம்பர் மாத தொடக்கத்தில் சமட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றபோது ஒதியடிக்குப்பம் செல்லும் சாலையில் முந்திரி தோப்பில் வைத்து நகைக்காகக் கொலை செய்யப்பட்டார். ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு கொலைகளையும் ஒரே நபர் செய்திருக்கலாம் என்பதால் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திருமூர்த்தி என்ற 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் பண்ருட்டி அருகே உள்ள பலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்.
ஆனால் கரும்பு வெட்டும் தொழிலுக்காகப் புலியூர் கிராமத்திற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. தற்போது கொல்லப்பட்ட 55 வயதாகும் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை திருமூர்த்தி ஒப்புக்கொண்டார். அதேபோல மகாலட்சுமியையும் கொலை செய்து அவரது நகைகளை மட்டும் திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் இரண்டு பெண்களிடமும் கொள்ளையடித்த நகைகளைப் பண்ருட்டி அருகே உள்ள அடகு கடையில் விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அந்த அடகு கடைக்குச் சென்ற போலீசார் நகைகளை மீட்டனர். நகைக்கடையிலிருந்து மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்தபோது போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கும்போது திருமூர்த்தி தப்பி ஓடி முயன்றுள்ளார்.
அப்பொழுது காவல் நிலையத்திற்கு எதிரே இருந்த தடுப்பு சுவற்றில் ஏறிக் குதிக்கும்போது அவரது வலது கை மற்றும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரைக் கடலூர் அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாவு கட்டு போடப்பட்டது. பின்னர் நீதிமன்ற காவலுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். 55 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்று அவர் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
