Tvk MLA -வை சுட்டு தள்ளுவேன்.! சர்ச்சையான கலெக்டர் விவகாரம்.!

ஒரு மாவட்டத்தின் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையா? அதுவும் ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏவால் இத்தகைய தொல்லையா? அப்படியென்றால், சாமானிய மக்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் கொடுப்பது.?

“நான் மட்டும் கலெக்டராக இருந்திருந்தால் என்கவுன்ட்டர் செய்திருப்பேன்… கட்டிப்போட்டு அடித்துத் துவைத்து சுட்டுத் தள்ளியிருப்பேன்!” என்று அதிரடியாகப் பொங்கியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..அதுமட்டுமின்றி, மாவட்ட ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொல்லை கொடுப்பவர்களுக்கு ரெட் கார்ப்பெட் விரித்து வரவேற்பார்களா? என்றும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்..ஜெயக்குமார் ஏன் இவ்வளவு ஆவேசமானார்? முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல்  அமைதி காப்பது ஏன்? விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெண் மாவட்ட ஆட்சியராக இருக்கும் பத்மஜாவுக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கும் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினைதான் தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் போன்ற மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு, மக்கள் பிரதிநிதியாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, மதுபோதையில் மாவட்ட ஆட்சியரின் இல்லத்திற்கே சென்று அவர் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக நிரூபிக்கப்பட்டால், அது ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக மட்டும் பார்க்கப்பட முடியாது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பொறுப்பையும், பொதுவாழ்க்கைக்கான ஒழுக்கத்தையும் எந்த அளவுக்குப் பின்பற்றுகிறார்கள் என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது. ஏனென்றால், மாவட்ட ஆட்சியர் என்பவர் ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவது முதல் சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பது வரை பல முக்கியப் பொறுப்புகள் அவருக்கு இருக்கின்றன.

அப்படிப்பட்ட அதிகாரியிடமே இத்தகைய அத்துமீறல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் வெளியானதும் அரசியல் களத்தில் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கின. பெண் அதிகாரிக்கு எதிராக இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே, புதன்கிழமை முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அவர் மீது  கட்சித் தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டத்திற்குப் பிறகு அவருக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இதுதான் தற்போது தவெக அரசுக்கு எதிரான அரசியல் விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஒருபுறம் பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. மறுபுறம், ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் எழும்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில்தான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரம் தொடர்பாக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், “நான் மட்டும் கலெக்டராக இருந்திருந்தால் சுட்டுத் தள்ளியிருப்பேன். அதுமட்டுமில்லாமல் கட்டிப்போட்டிருப்பேன். வீடு தேடி ஒருவர் வந்தால் என்ன செய்திருப்பீர்கள்? ரெட் கார்ப்பெட் போட்டு வரவேற்றிருப்பீர்களா?

அடித்துத் துவைத்து சுட்டுத்தள்ள வேண்டும். ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஜெயக்குமாரின் இந்தப் பேட்டி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *