Advertisements

மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஒரு பாமகவும் அவரது மகன் மருத்துவர் அன்புமணி தலைமையில் மற்றொரு பாமகவும் உதயமான நிலையில் இரண்டு பாமகவும் 15 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதிக் கொள்ளப் போகிறார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் புதுமையான இந்த நிகழ்வு மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்த காத்திருக்கிறது .பாமகவினர் ஒருவரை ஒருவர் மோதிக் கொள்வதால் மேற்கண்ட 15 தொகுதிகளில் எந்தவிதமான கலாட்டா நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை .
மருத்துவர் ராமதாஸின் குடும்பச்சண்டை தற்பொழுது அரசியல் யுத்தமாக மாறி தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு வருகிறார்கள் . எந்தவித சமரசத்திற்கும் இருவரும் முன்வராக நிலையில் அன்புமணி தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து விட்டார் . இது குறித்து , மருத்துவர் ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் அன்பு மணியுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதே தவறு என கருத்து தெரிவித்திருக்கிறார் ,
மருத்துவர் அன்புமணி அதிமுகவில் இணக்கமாகிவிட்டதால் மருத்துவர் ராமதாஸ் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது . ஏற்கனவே அவர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் . மு க ஸ்டாலினும் வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் ஓட்டு தேவை என்பதால் மருத்துவர் ராமதாசை இணைத்துக்கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனை சமாதானம் செய்யலாம் என ஒரு முடிவு எடுத்தார் .
இது பற்றி தொல் திருமாவிடம் மு.க ஸ்டாலின் பேசியபோது பாமக இருக்கும் இடத்தில் நிச்சயமாக விசிக இருக்காது என உறுதியாக தெரிவித்துவிட்டார். இதனால் ராமதாஸ் திமுக பக்கம் இணையும் சூழ்நிலை ஏற்படவில்லை . இதற்கிடையே மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்களை இணைத்துக் கொள்வதில் மும்முரம் காட்டி வரும் தமிழக வெற்றி கழகம் மருத்துவர் ராமதாசை இணைத்துக்கொள்ளலாம் என விருப்பப்படுகிறது .
வடமாவட்டங்களில் வன்னியர்களின் வாக்குகள் தேவை என்பதால் மருத்துவர் ராமதாசை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொள்ளலாம் என கருதுகிறார்கள் . இது தொடர்பாக நடிகர் விஜய் ஜனநாயகன்பட பிரச்சனை முடிந்த பிறகு மருத்துவர் ராமதாசை தைலாபுரம் சென்று அவரது வீட்டில் சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது . முன்னதாக மருத்துவர் ராமதாசுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடிந்து விட்டதாக சொல்கிறார்கள். இதனை தொடர்ந்து தைலாபுரத்தில் நடிகர் விஜய் ராமதாஸ் சந்திப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது .
இந்த நிலையில் , அதிமுகவுடன் இணைந்த அன்புமணி தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கி தருவதாக பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதேசமயம் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழக வெற்றி கழகத்தில் 20 தொகுதிகள் ஒதுக்கி தரப்படுவதாக பேசப்பட்டிருக்கிறது . அந்த வகையில் தர்மபுரி ,கிருஷ்ணகிரி, மேட்டூர் ,சேலம் ,மேற்கு சங்கராபுரம், சோளிங்கர் ,பூந்தமல்லி ,கும்மிடிபூண்டி, மயிலாடுதுறை, கீழ்வேளூர் ,பெண்ணாகரம், விருத்தாச்சலம், கடலூர் ,கீழ் பெண்ணாத்தூர், செஞ்சி, மயிலம் ,ஜெயங்கொண்டம் ,திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர் ,ஆற்காடு, ஆத்தூர் ஆகிய தொகுதிகள் பாமக செல்வாக்கு பெற்ற தொகுதிகள் ஆகும்.
இந்த தொகுதிகள்தான் தற்பொழுது அதிமுக கூட்டணியில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. அதேபோல் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இதே தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என தெரிகிறது .
கடந்த முறை அன்புமணி மற்றும் மருத்துவர் ராமதாஸ் ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவில் இணைந்த போது மொத்தம் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன . இருந்த போதிலும் ஐந்து தொகுதிகளில் தான் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .
அந்த வகையில் தற்பொழுது இருவரும் இரு அணிகளாக பிரிந்து இருப்பதால் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கிகள் சிதறும் என தெரிகிறது .
இருந்த போதிலும் அன்புமணி தரப்பிலான பாமக அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பையும் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெற்றி வாய்ப்பையும் ஏற்படுத்தி தரும் பலமான கட்சியாக பார்க்கப்படுகிறது . பொதுவாக பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆவேச குணம் கொண்டவர்கள் என்பது தமிழ்நாடு அறிந்த விஷயம் தான். அந்த வகையில் ஏற்கனவே ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த அருள் எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
எனவே வருகிற தேர்தலில் 15 தொகுதிகளை கொண்ட வடமாவட்டங்களில் தேர்தல் கலாட்டாக்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்பது பரபரப்பு தகவலாக பார்க்கப்படுகிறது . இதனிடையே அன்புமணி தலைமையிலான பாமக மீது மீண்டும் தேர்தல் கமிஷன் இடம் ராமதாஸ் தரப்பினர் புகார் செய்ய காத்திருக்கிறார்கள் .
இதற்கிடையே வட மாவட்டங்களில், மாம்பழச்சின்னம் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய சின்னமாக பார்க்கப்படுகிறது . தமிழ்நாடு முழுவதும் இரட்டை இலையும் உதயசூரியனும் மக்கள் மனதில் பதிந்த நிலையில் வடமாவட்டங்களில் மாம்பழ சின்னம் மக்கள் மத்தியில் வெகுவாக பதிந்துவிட்ட சின்னமாகும் . தற்பொழுது மாம்பழச் சின்னம் கேட்டு அன்புமணி தரப்பினரும் ராமதாஸ் தரப்பினரும் மோதி வருவதால் இருவருக்குமே மாம்பழச் சின்னம் கிடைக்காது என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியினர் தனித்தனி சின்னத்தில் போட்டியிட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements



