TVK Conference:- த.வெ.க. முதல் மாநில மாநாடுகுறித்து நாளை ஆலோசனை!

Advertisements

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது.

சென்னை:தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை இம்மாதம் 23-ந் தேதியன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதாகவும், அதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு ஏற்கனவே காவல்துறையிடம் அக்கட்சியினர் மனு கொடுத்தனர்.

இதையடுத்து 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய நாட்கள் இல்லை என்பதாலும், இதனிடையே விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியானதாலும், மாநாடு தேதி தள்ளிப்போனது.

மாநாட்டை எந்தத் தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதையடுத்து அந்தத் தகவலை மீண்டும் மனுமூலம் காவல்துறையிடம் கொடுத்தனர்.

இந்த நிலையில், த.வெ.க. முதல் மாநில மாநாடுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 3.00 மணிக்குப் பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகள், தொண்டர்களை அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைத்து பணிகளையும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *