TTF Vasan Bail Petition: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!

Advertisements

TTF Vasan Bail petition: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த ஜாமீன் மனுமீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

சென்னை: சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானதாகப் பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் என்கிற வைகுந்தவாசன், செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிஎஃப் வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவைக் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு டிடிஎஃப் வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சாலையில் மிதமான வேகத்தில் வந்த நிலையில், கால்நடைகள் சாலையைக் கடந்ததால் திடீரெனப் பிரேக் போட்டதால், வாகனத்தின் சக்கரம் தூக்கியதாகவும், பிரேக் போடாமல் இருந்தால் கால்நடைகள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை எனவும், புண்கள் மோசமாகி வருவதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல், தான் ஒரு அப்பாவி என்றும், எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று (அக் 05) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *