வான்பரப்பு குறித்த டிரம்ப்பின் கருத்துக்கு வெனிசுலா அரசு கண்டனம்..!

Advertisements

வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். குறிப்பாக, வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக தெரிவித்த டிரம்ப், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும், அந்த கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் டிரம்ப் அதிரடியாக குற்றம்சாட்டினார்.

அதோடு, போதைப்பொருள் கடத்தலை தடுக்க வெனிசுலா மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், வெனிசுலா அருகே கரீபியன் கடலில் அதிக அளவிலான போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் நீர்மூழ்கி கப்பல்களையும், படை வீரர்களையும் அமெரிக்கா நிலை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் வெனிசுலா மீது அமெரிக்கா எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதற்கிடையில், வெனிசுலா வான்பரப்பை விமான நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று டிரப்ம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், மனிதக் கடத்தல் கும்பல்கள் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொள்ளுங்கள், வெனிசுலா நாட்டின் வான்பரப்பு முழுவதுமாக மூடப்பட உள்ளது” என்று பதிவிட்டிருந்தார். இதனால் கரீபியன் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில், டிரம்ப்பின் கருத்துக்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டின் வான்பரப்பை என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், டிரம்ப்பின் பேச்சு சர்வதேச சட்டத்திற்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் என்றும் வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் நடவடிக்கையை மற்ற நாடுகள் கண்டிக்க வேண்டும் எனவும் வெனிசுலா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *