Vijay:அதிக உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட செயலாளர்களுக்கு பரிசு!

Advertisements

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் அடுத்த மாதம் 23-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை:தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கட்சியைத் தொடங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அப்போதே நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கொடி, கொள்கைகள் வெளியிடப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தற்போது கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் , த.வெ.க. கட்சி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

இதனைத்தொடர்ந்து கடந்த 22-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதற்காக பனையூரில் உள்ள அலுவலகத்தில் சுமார் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நடப்பட்டது. திட்டமிட்டபடி அன்றைய தினம் விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த கொடியில், இரட்டை போர் யானை நடுவில் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்றிருந்தன. விஜய் கட்சி மாநாடுகட்சிக் கொடி வெளியீட்டிற்குப் பிறகு அனைவரது பார்வையும் விஜய் கட்சியின் மாநாடு மீது தான் இருந்து வந்தது.

இந்த சூழலில் விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மனு அளித்தனர்.

இதனிடையே தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு கட்சி தலைமையில் இருந்து அவசர உத்தரவு பறந்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு வந்ததாக தெரிகிறது.

இதன்படி மாவட்ட வாரியாக அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு விக்கிரவாண்டியில் நடக்கும் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பரிசளிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்தும் வகையில் மக்களை சந்திக்க மாவட்ட செயலாளர்கள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *