
அமெரிக்க தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னிடம் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரை மீட்க தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வலியுறுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நீண்ட காலமாகச் சிக்கி தவித்து வருவது கொடூரமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
“விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களை விரைவில் வீட்டிற்கு அழைத்து வர டொனால்டு டிரம்ப் ஸ்பேஸ் எக்ஸ்-ஐ கேட்டுள்ளார்.
நாங்கள் அவ்வாறு செய்வோம். பைடன் இவர்களை நீண்ட காலம் தவிக்கச் செய்தது கொடூரமானது,” என்று மஸ்க் எக்ஸ் தள பதிவில் கூறினார்.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், அவர்கள் சிக்கி தவிக்கவில்லை, நலமுடன் இருக்கிறார்கள் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்து நாட்களில் பூமிக்க திரும்பத் திட்டமிடப்பட்டு இருந்தது.
எனினும், அவர்கள் இன்றுவரை பூமிக்கு திரும்ப முடியாத சூழல்தான் நிலவுகிறது.
