
புதுடில்லி: நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதில் ஈடுபடுவோருக்கு ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு நேற்று ( ஜூன் 21) அமல்படுத்தியது.
யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, என்டிஏ மற்றும் ரயில்வே, வங்கி துறைகளில் நடக்கும் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
கடுமையான தண்டனை
வினாத்தாள் கசிவு மற்றும் விடைத்தாளை சேதப்படுத்துபவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ரூ.10 லட்சம்வரை அபராதம் விதிக்கப்படும்.
ஜாமினில் வெளிவர முடியாது
இந்தச் சட்டத்தின் கீழ் அனைத்து குற்றங்களும் ஜாமினில் வெளிவர முடியாதவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வாரண்ட் இல்லாமல் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியும். குற்றவாளிகள் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்ய முடியாது
கடுமையான அபராதம்
தவறு நடந்தது அறிந்தும், அதுபற்றிப் புகார் அளிக்காத தேர்வை நடத்துபவர்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும்.
ஒருங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்குக் குறி
தேர்வு நடத்தும் அமைப்புகளில் இருக்கும் மூத்த அதிகாரிகளுக்குத் தெரிந்தே தவறுச் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அதனுடன் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தேர்வு நடத்துபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படலாம்.
அப்பாவிகளுக்கு ஆறுதல்
தங்களுக்கு தெரியாமல் குற்றம் இழைக்கப்பட்டதையும் அதைத் தடுக்க அவர்கள் தங்களால் முயன்றதையும் நிரூபிக்கும் நபர்களுக்குப் பாதுகாக்கும் வகையில் இந்தச் சட்டத்தில் முக்கிய அம்சங்கள் உள்ளன.
இந்தச் சட்டம் கடந்த பிப்., மாதம் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது, நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதுகுறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல், முறைகேடு நடந்ததை தொடர்ந்து நெட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், சிஎஸ்ஐஆர் – யுஜிசி – நெட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், இச்சட்டத்தை நேற்று முதல் மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.


