
இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில், வருண் சக்கரவர்த்தி தொடர்ச்சியான டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான வருண் சக்கவர்த்தி சிறிய இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.
அதன் தொடர்ச்சியாகத் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி வெறும் 24 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் உள்பட ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்சே மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் விக்கெட்டுகள் அடங்கும்.
கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்ததிலிருந்து வருண் சக்கரவர்த்தி பத்து போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இவரது சராசரி 10.96 ஆகும். இதில் சிறந்த பந்துவீச்சாக 17 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை எடுத்தது இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் 16 போட்டிகளில் இவர் 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் வருண் சக்கரவர்த்தி இந்தத் தொடரில் மட்டும் பத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
அந்த வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒற்றை டி20 தொடரில் பத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை வருண் சக்கரவர்த்தி பெற்றுள்ளார்.
இதன் மூலம், தொடர்ச்சியாகப் பத்து டி20 போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார்.
முன்னதாக இந்திய வீரர் குல்தீப் யாதவ் பத்து டி20 போட்டிகள் முடிவில் 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக இருந்தார்.
