வழக்கம்போல தவெக அரசு தனது தோல்விகளுக்குத் திமுக மீது பழி சுமத்துவதாகத் திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அறிவாளிகளால் பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனம், தற்போதைய ஆட்சியாளர்களின் முதிர்ச்சியற்ற, சமூக ஊடகங்களை மையமாகக் கொண்ட அரசியலால் இழிவுபடுத்தப்படுவது மிகுந்த மனவேதனையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு சில பணியாளர்கள் வெளியேறியதால் முதலீடுகள் அனைத்தும் போய்விடும் என்று அரசு முன்வைக்கும் வாதம், அதைவிடக் கேவலமானது என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்பு கட்டமைப்பும், தொழில் சூழலும் அவ்வளவு பலவீனமானவை என்று இந்த அரசு கருதுகிறதா? என்று வினவியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், தற்போது வெளியேறியவர்களில் பெரும்பாலோர் அதிமுக ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளார். எனவே வழக்கம்போல தவெக அரசு தனது தோல்விகளுக்குத் திமுக மீது பழி சுமத்துகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். யாராலும் எளிதில் தமிழ்நாட்டிலிருந்து முதலீடுகளைத் தட்டிச் சென்றுவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். ஆனால், திறமையற்ற, பாதுகாப்பற்ற உணர்வு கொண்ட, உணர்ச்சியற்ற முடிவுகள் நிச்சயமாக முதலீடுகளை விரட்டிவிடும் என்று கூறியுள்ளார்.

