மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு… நடிகர் அர்ஜுன் போலீசில் புகார்..!

மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற அவதூறுகள் பரப்பப்படுவதாகக் கூறி, நடிகர் அர்ஜுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தனது மகளின் கண்ணியத்தைக் குறிவைத்து அவதூறு பரப்புவதை இனியும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அன்ஜனா என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதற்கிடையே, அண்மையில் அர்ஜுனின் இரண்டாவது மகள் அன்ஜனாவின் திருமணம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் கலந்துகொண்ட நிலையில், ஐஸ்வர்யா மட்டும் பங்கேற்றதாகவும், அவரது கணவர் உமாபதி கலந்துகொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்களும், விவாதங்களும் பரவின. குறிப்பாக, ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் அர்ஜுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், தனது சமூக வலைதளப் பதிவில், ஒரு பெண்ணுக்குத் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், விரும்பியபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. மகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாமல் அவரது தனியுரிமைக்கு மதிப்பளித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனது மகளை மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறுவது உள்ளிட்ட இழிவான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்களது மௌனத்தை தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்றும், இனியும் இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஒரு தந்தையாக தனது மகளின் கண்ணியத்திற்கும், சுயமரியாதைக்கும் எப்போதும் துணை நிற்பேன் என நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *