தமிழ்நாட்டில் 4,970 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக, வருவாய் அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர், கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 4, 970 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. கடற்கரையோர மாவட்டங்களில் 121 இடங்களில் புயல் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. கனமழையால் இதுவரை பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 400 மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன. எந்த சூழல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. மக்களுக்கு உரிய தகவல் கொடுத்த பிறகே நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். சென்னையில் 169 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
22 சுரங்கப் பாதைகளும் கண்காணிக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், உயிர்சேதம் இல்லாத நிலை உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 85 சதவிகிதமும், புழல் ஏரியில் 82 சதவிகிதமும் நீர் இருப்பு உள்ளது” என அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.