உதகையில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவி இரண்டு வருடங்களாகச் சேமித்து வைத்த தொகையினை கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட மிளிதேன் காக்காசோலை கிராமத்தைச் சேர்ந்த மாணவி சஷ்விதா, இவர் கேர்கொம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இரண்டு வருடங்களாகச் சேமித்து வைத்திருந்த பணத்தை கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மக்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக இன்று மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணாவிடம் வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவி சஸ்விதாவிற்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கிப் பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், கனமழையால் தென் மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் செய்யும் வகையில் நீலகிரி மாவட்டத்திலிருந்து தொடர்ந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் நேற்று வரை 6 லாரிகளில் சுமார் 25 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகள், உடைகள், சோப் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் நீலகிரி மாவட்டத்திலிருந்து அனுப்பப்படும் காய்கறிகள் அழுகி விடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, மாணவியின் தாயார் சப்ரிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

