Advertisements

முன்னோர்களின் ஆசி பெரும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை!
மாதா மாதம் அமாவாசை வரும். ஆனால் நாம் ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையை முக்கியமாக வழிபடுவோம். அதிலும் புரட்டாசியில் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் தர்ப்பனம் கொடுக்கிறோமோ இல்லையோ இம்மாதத்தில் வரும் அமாவாசையில் கண்டிப்பாகத் தர்ப்பணம் கொடுப்பார்கள். இறந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து, அவர்களை வழிபடுவதே வழக்கம். பித்ருக்கள் என்று அழைக்கப்படும் நம் இறந்த முன்னோர்களின் ஆசியும், வழிநடத்தலும் தேவை என்பதால் இந்துக்கள் இம்மாத அமாவாசயை வழிபடுவார்கள்.

மகாளய அமாவாசை அன்றைக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம், தானம் ஆகியவை நம்முடைய முன்னோர்களின் மனதை மகிழ செய்யும். அது அவர்களுக்கு இனி வரும் பிறவிகளில் துன்பம் இல்லாத வாழ்க்கையையோ அல்லது மோட்சத்தையோ தரும்.நாம் செய்யம் முன்னோர் வழிபாட்டால் நம்முடைய முன்னோர்கள் மட்டுமல்ல நம்முடைய குடும்பமும், தலைமுறையும் நன்மைகளைப் பெறும். முன்னோர்களின் ஆசி முழுவதுமாகக் கிடைத்து விட்டால் குலதெய்வ அருளும், இஷ்ட தெய்வத்தின் அருளும் நமக்குக் கிடைத்து விடும்.மகாளய பட்சத்தின் 15 நாட்களும் முன்னோர்களை நினைத்துக் காலையில் எள்ளும், தண்ணீரும் இறைக்க வேண்டும். பிறகு பகல் பொழுதில் வீட்டில் சமைக்கும் உணவை முன்னோர்களுக்குப் படைத்து வழிபட வேண்டும். மாலையில் வீட்டின் பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்குடன், தனியாக ஒரு அகலில் நல்லெண்ணெய் ஊற்றி முன்னோர்களுக்காகத் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனால் அவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்குரிய நாளாகும். அனைத்து அமாவாசை நாட்களிலும் தவறாமல் விரதம் இருந்து முன்னோர் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனச் சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதே சமயம் அனைத்து அமாவாசைகளிலும் விரதம் இருந்து முன்னோர்களுக்குச் செலுத்த வேண்டிய பிதுர் கடன்களை நிறைவேற்ற முடியாதவர்கள் வருடத்தில் வரும் மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக விரதம் இருந்து, தர்ப்பணம், சிராத்தம் போன்றவற்றை செலுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.பித்ருலோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நம்மைப் பார்ப்பதற்காகப் பூலோகத்திற்கு வருவதுண்டு. அப்படி அவர்கள் பித்ருலோகத்திலிருந்து புறப்படும் நாளைத் தை அமாவாசை என்றும், பூலோகத்திற்கு வந்து நம்முடன் தங்கி காலத்தை மகாளய பட்சம் என்றும், மீண்டும் அவர்கள் பித்ருலோகத்திற்கு செல்லும் நாளை ஆடி அமாவாசை என்றும் சொல்கிறோம். இந்த மூன்று அமாவாசைகளும் மிக முக்கியமான அமாவாசைகள் என்பதால் இவற்றைத் தவற விடாமல் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

இவற்றைப் புரட்டாசி மாத பெளர்ணமிக்கு பிறகு வரும் 15 நாட்களை மகாளய பட்ச காலம் என்கிறோம். இந்த 15 நாட்களும் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்பானதாகும். அப்படி மகாளய பட்ச காலத்தில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் மகாளய அமாவாசை தினத்தில் கண்டிப்பாகத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மற்ற அமாவாசைகளில் நாம் யாருடைய பெயரைச் சொல்லித் தர்ப்பணம் கொடுக்கிறோமோ அது அவர்களை மட்டுமே போய்ச் சேரும்.ஆனால் மகாளய அமாவாசை அன்று நாம் கொடுக்கும் தர்ப்பணம், பெயர் தெரிந்த மற்றும் தெரியாத நம்முடைய முன்னோர்கள் அனைவரையும் சென்று சேரும். இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளும், தான தர்மங்களும் அவர்கள் மோட்சத்தை அடைய செய்யும். அதனாலேயே மகாளய அமாவாசையை சர்வபித்ரு மோட்ச அமாவாசை என்று குறிப்பிடுகிறோம்.தர்ப்பணம் ஆண்கள் மட்டுமே கொடுக்க வேண்டும். அதுவும் நீர் நிலைகளில், கோவில் படித்துறைகளில் கொடுப்பர். காசி, ராமேஸ்வரம், கயா, போன்ற சிவன் கோவில்களிலும் கொடுப்பது வழக்கமாக உள்ளது.
Advertisements

