
இன்று முதல் வருகின்ற 28 ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், 18 மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை கடும் வெப்ப அலை வீசும் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று முதல் வருகின்ற 28 ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், 18 மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை கடும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்
தமிழ்நாடு பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு காற்று திசை மாறுபாடு காரணமாக, இன்று (ஏப்ரல் 25) தென் தமிழக மாவட்டங்கள், வடதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
மேலும் படிக்க – அதிகபட்ச வெப்பத்தை அனுபவிக்கும் மிகவும் வெப்பமான நகரங்கள்!
அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை
நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 30 ஆம் தேதிவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட மூன்று டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகும். அதேபோலத் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 39 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம்.
எந்த மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்?
எனவே இன்று 18 மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நீர் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குழந்தைகளை, பெரியவர்களை வெளியில் அதிகமாக அழைத்து வர வேண்டாம். மேலும் 12 மணி முதல் 3 மணிவரை வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் மற்றும் வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

