
விருதுநகர்: விருதுநகர் சின்னமூப்பன்பட்டியில் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணக்கழிவை மர்ம நபர்கள் யாரோ கரைத்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் சின்னமூப்பன்பட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. 200 மாணவர்கள் படிக்கின்றனர். இங்குக் காலை உணவு திட்டத்திற்காக 15 நாட்கள் முன் புதிய குடிநீர் தொட்டி நிறுவப்பட்டது. தரைத்தள தொட்டியான இதில் நீரை சேமித்து தான் மகளிர் சுய உதவிக்குழுவினர் காலை உணவைச் சமைத்து மாணவர்களுக்கு வழங்குகின்றனர்.இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை நாளான செப். 2, 3ல் சாணம் கலக்கப்பட்டுள்ளது. இதே போல் மூன்றாவது முறையாக நேற்று (செப்.,6) அரசு விடுமுறையின் போதும் கலக்கப்பட்டுள்ளது.
2 நாட்களாகத் தொட்டியைச் சுத்தம் செய்து விட்டுப் புதிய குடிநீரை ஏற்றித் தான் பயன்படுத்தி உள்ளனர். மூன்றாவது நாளும் இது தொடர்ந்ததால் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த சமையலர் முத்துலெட்சுமி, ஊர்மக்களிடம் புகார் தெரிவித்தார்.இந்நிலையில் எரிச்சலடைந்த கிராம மக்கள் கூச்சலிட்டனர். ஊர்தரப்பிலிருந்து ஒருவர் போலீசாருக்கு புகார் அளித்தார். அங்கு விரைந்த டி.எஸ்.பி., பவித்ரா மற்றும் மேற்கு போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். உடனடியாகத் தொட்டியில் சாணம் கலந்திருந்த குடிநீரை வெளியேற்றிச் சுத்தம் செய்து பிளிச்சீங் பவுடர் போட்டுக் கழுவினர்.

