திருப்பரங்குன்றம் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் உச்சியில் உள்ள தூணில் திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்றுவதாக உறுதியளித்த தமிழ்நாடு அரசு, திருக்கார்த்திகை நாளில் உச்சிப் பிள்ளையார் கோவில் மீது தீபம் ஏற்றிவிட்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த மறுத்துவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் திருப்பரங்குன்றத்தின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட்டனர்.இதற்காகக் கோவில் அறங்காவலர் குழுச் செயல்பாட்டை நிறுத்தி வைத்துக் கோவில் நிர்வாகத்தை ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரை ஏற்கச் செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோவில், குன்றம் வளாகத்தை மத்திய ரிசர்வ் காவல்படை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டனர்.அதன்படி திருப்பரங்குன்றத்தின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மத்திய ரிசர்வ் காவல்படையினர் திருப்பரங்குன்றம் நகரிலும், கோவிலிலும், குன்றத்திலும், தர்க்காவிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றத்துக்கு வந்துள்ள மத்தியப் படையினருக்குப் பொதுமக்கள் பூத்தூவி வரவேற்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்துள்ள பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்காக நெய், திரி ஆகியவற்றுடன் குன்றத்துக்குப் படிக்கட்டு வழியாகச் சென்றனர்.
தீபம் ஏற்றுவதைச் செயல்படுத்த வந்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோருக்குக் கோவில் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்துக்கள் திருப்பரங்குன்றத்துக்குச் செல்வதைப் போலவே, குன்றத்தில் உள்ள தர்க்காவுக்கு முஸ்லிம்களும் அமைதியாகச் சென்றனர். இந்நிலையில் மத நல்லிணக்கத்துடன் இன்று மாலை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட உள்ளது.

