ரஷ்யா – உக்ரைன் போர் லிபியா வரை விரிவடைகிறதா?

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஐரோப்பிய எல்லைகளைக் கடந்து, வட ஆப்பிரிக்கப் பகுதியான லிபியா வரையிலும் விரிவடைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காசி துறைமுகத்தில் ரஷ்யக் கடற்படைக்குச் சொந்தமான ‘மெர்குரி’ (Merkury) என்ற போர்க்கப்பல் கடந்த நவம்பர் 22ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்தக் கப்பலை இலக்காகக் கொண்டு கடல் வழி ஆளில்லா டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்தத் தாக்குதலில் ரஷ்யப் போர்க்கப்பல் கடுமையாகச் சேதமடைந்து கடலில் மூழ்கியது. உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளே பொறுப்பேற்றதாகத் தெரிவித்தார். ஏழு கடல் வழி டிரோன்கள் இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ரஷ்யாவின் ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற மூன்று சரக்குக் கப்பல்கள், ‘கோலோவ்கோ’ (Golovko) என்ற ரஷ்யப் போர்க்கப்பலின் பாதுகாப்புடன் லிபியாவை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் பெங்காசி தாக்குதல் நடைபெற்ற அதே நாளில், அந்தக் கப்பல்கள் தங்களது பயணத்தைத் திசைமாற்றியுள்ளன.
சில கப்பல்கள் சிசிலி நீரிணைப் பகுதியிலிருந்து திரும்பியதாகவும், மற்றொரு கப்பல் குழு அல்ஜீரியக் கடற்கரை அருகே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், ரஷ்யப் போர்க்கப்பல் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய மற்றொரு சரக்குக் கப்பலும் தாக்குதலுக்கு உள்ளானதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதனால் லிபியாவின் துறைமுகங்கள் சர்வதேசப் போருக்கான களமாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.இந்தச் சம்பவம் குறித்து லிபியாவின் கிழக்குப் பகுதி நிர்வாகம் ரஷ்யாவுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. லிபியாவின் துறைமுகங்கள் மற்றும் கடல் எல்லைகள் பிற நாடுகளுக்கு இடையிலான மோதல்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அந்நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, லிபியாவில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் முன்கூட்டியே ஆலோசிக்கவில்லை என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மத்தியத் தரைக்கடல் பகுதியில் போர் விரிவடைவது குறித்த கவலையும் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.

இதனால் ரஷ்யா – உக்ரைன் போர் மேலும் எந்தெந்தப் பகுதிகளுக்குப் பரவக்கூடும்? மத்தியத் தரைக்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பில் இந்தச் சம்பவம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *