
தில்லைவாடி வள்ளியம்மை.
பதினாறு வயதே ஆன முதல் விடுதலை போராளி, காந்தியை சுட வந்தபோது முதலில் என்னைச் சுடுங்கள் எனக் காந்திக்கு முன்பு சென்று நின்ற நெஞ்சுரம் கொண்டவள், கைதாகி சிறையில் இருக்கும்போது உன் நாட்டிற்கு என எந்தக் கொடி இருக்கிறது என ஏளனமாகக் கேட்ட சிறை அதிகாரியிடம் தனது ஆடையின் ஒரு பகுதியைக் கிழித்து இது தான் என் நாட்டின் கொடியெனத் துணிச்சலாகப் பதிலளித்தவள்.
சிறை வாசத்தை பெறுமையாக நுகர்ந்தவள், இந்தியா என்றொரு நாடு இருக்கும் வரை தென்னாப்பிரிக்காவின் சத்தியாகிரக சரித்திரத்தில் இவள் பெயரும் நீங்காமல் இருக்கும் எனப் பெருமையுடன் காந்தியடிகளால் கூறப்பட்டவள், அவள் பிறந்த மண்ணை காந்தி கன்ணில் எடுத்து ஒத்தி கொண்டவர் என அத்தனை பெருமைகளையும் சுமர்ந்து கொண்டு மறைந்தாலும் நூற்றாண்டைக் கடந்து வீரத்திற்கு எடுத்துக் காட்டாய் வாழ்பவள் தான் தில்லைவாடி வள்ளியம்மை.

இரு நூற்றாண்டுகளாக வெள்ளையனிடம் அடிமைப்பட்டு இருந்த இந்தியா சுதந்திர காற்றை சுவாசிக்க ஆங்காங்கே பற்றிய தீப்பொறிகளே காரணங்களாக இருந்தன. அப்படியொரு சிறிய தீப்பொறியாய் தோன்றியவர் தான் தில்லைவாடி வள்ளியம்மை. தென்னிந்தியாவில் திருப்பூர் குமரன், வட இந்தியாவில் பகத் சிங் ஆகியோர் இளம் வயதிலேயே சுதந்திரத்திற்காகப் போராடி இன்னுயிரை தியாகம் செய்த வரலாறு உண்டு. அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக, 16 வயதிலேயே அடக்குமுறையை எதிர்த்து அதுவும் பிழைப்பு தேடி சென்ற தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காகப் போராட்டத்தில் களத்தில் குரல் கொடுத்தவர் தான் வள்ளியம்மை என்ற சிறுமி.
வள்ளியம்மையின் வரலாறு தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும், அவரின் தொடக்கம் தமிழ்நாடாகத் தான இருந்தது. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் உரிமைக்காகப் போராட தொடங்கிய காலகட்டம் அது. தென்னாப்பிரிக்காவை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அங்குள்ள மக்களைக் கரும்பு பண்ணைகள், சுரங்களில் வேலை பார்க்க வலியுறுத்தினர். கருப்பினத்தவர்கள் வேலை செய்ய முன்வராததால், அவர்களுக்குப் பதிலாக அங்கு வாழும் இந்தியர்களைச் சுரங்கத்தில் வேலை பார்க்க வைத்தனர்.

அப்போது நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இருக்கும் தில்லைவாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி – மங்களத்தம்மாள் தம்பதியினர் பிழைப்பு தேடி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்தனர். அங்குச் சுரங்கத்தில் தினக்கூலிகளாக இருவரும் வேலை பார்த்தனர். இந்தியர்கள் தலைக்கு 3 பவுண்டு கட்ட வேண்டும், மிகக் குறைந்த கூலி, அதிகமான வேலை, வெள்ளையனுடன் இணைந்து பயணிக்க அனுமதி மறுப்பு, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், ஓட்டுரிமை மறுப்பு என வெள்ளையர்களின் ஆதிக்கம் சொல்ல முடியாத வகையில் இருந்தது.
அப்போது தான் 1898ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி முனுசாமிக்கு வள்ளியம்மை பிறந்தார். குழந்தை பருவத்தில் வள்ளியம்மை வளரும்போதே, அவருடன் இணைந்து ஆங்கிலேயர்களின் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும், தென்னாப்பிரிக்காவின் கிறிஸ்த்துவ மதச்சடங்கு படி திருமணம் பதிவு செய்ய வேண்டும், மற்ற திருமணங்கள் செல்லுபடியாகாது போன்ற கடுமையான சட்டங்களும் வளர்ந்தன.

அப்போது தென்னாப்பிரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து ஜொகன்னஸ்பர்க்கிலிருந்து நியூகேஸில் வரை அகிம்சை முறையில் காந்தியடிகள் போராட்டத்தை நடத்தினார். அதில், இந்தியர்கள் பலர் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் ஒரு சிறுமி தனது கைகளை உயர்த்தி போராட்டத்தில் கலந்து கொண்டார்.
வெள்ளையர்களின் சட்டத்திற்கு எதிராக ‘ஜோகன்னஸ்பர்க்’கிலிருந்து ‘நியூகேஸில்’ நோக்கி அகிம்சை முறையிலான நடைப்பயணத்தில், உறுதிமொழித் தாளை எடுத்து, அதில் கலந்துகொண்டிருந்தவர்களிடம் காண்பித்த காந்தி, ‘இந்த உறுதிமொழித்தாளை யார் படிக்கிறீர்கள்’ எனக் கேட்டார். அப்போது, 15 வயதே ஆன சிறுமியான வள்ளியம்மை ஓடி வந்து, ‘நான் படிக்கிறேன்’ எனக் கூறியதும், ‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்’ என்ற முழங்கினார்.
15 வயது சிறுமியின் வீர முழக்கத்துடன் காந்தியின் அகிம்சை பயணம் தொடங்கியது. தொடர்ந்து வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் காந்தியை சுட்டு கொள்ள தென்னாப்பிரிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி காந்தி முன்பு வந்த நின்ற போலீசார் அவரைச் சுட துப்பாக்கியை நீட்டினார்கள். அப்போது அங்கு அதுவரை பார்வையாளராக இருந்த வள்ளியம்மை காந்தி முன்பு வந்து நின்றதுடன், ”இப்போது அவரைச் சுடு பார்க்கலாம்” என்றார். ”வள்ளியம்மையின் இந்த நெஞ்சுரத்தை பார்த்துத் திகைத்த வெள்ளையன் என்னைத் திரும்பிச் சென்றான்” காந்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடைப்பயணத்தின் முடிவில் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் வள்ளியம்மையும் கைதானார். அவர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது வள்ளியம்மையை இந்தியர் எனக் குறிப்பிட்டிருந்ததை பார்த்த சிறை அதிகாரி ஒருவர், வள்ளியம்மையிடம், ஆப்பிரிக்கர் எனப் பதிவு செய்ய வேண்டியது தானே, இந்தியா என்ற ஒரு நாடே இல்லை. அதற்குக் கொடியும் இல்லை என்று கூறி கேலி செய்தனர்.

அப்போது வள்ளியம்மை தனது ஆடையின் ஒரு பகுதியைக் கிழித்து இது தான் இந்தியாவின் கொடி. இனி இதுக்கும் ஒரு நாடு உண்டு எனத் துணிச்சலாகப் பதிலளித்தார். பின்னர், சிறுமியாக இருந்தாலும் வள்ளியம்மை மீது போலீசாரின் கருணை விழவில்லை. கடுமையான வேலை, போதுமான தூக்கம் இல்லாதது, அரைகுறை சாப்பாடு உள்ளிட்டவை வள்ளியம்மையை நோயாளியாக மாற்றியது. அவரது உடல்நிலை மோசமானதை பார்த்த அதிகாரிகள், போராட்டத்தில் பங்கேற்றதற்கு உரிய அபராதத்தை செலுத்தி விட்டு விடுதலை பெற்று செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், அது சத்தியாகிரக போராளிக்கு இழுக்கு என்ற வள்ளியம்மை சிறைவாசத்தை அனுபவித்தார். அபராத தொகை கட்ட மறுத்தார்.
பின்னர் காந்தியடிகளின் முயற்சியால் சமரசம் ஏற்பட்டு சிறையில் இருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். வள்ளியம்மையும் விடுதலையானார். ஆனால், அவரது உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. என்ன நோயின் தெரியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்த வள்ளியம்மை விடுதலையான பத்தே நாளில் 1914ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 16 வயதில் ஆங்கிலேயருக்கு எதிராக அதுவும் அந்நிய நாட்டில் போராடி உயிர் தியாகம் செய்த வீரம் வள்ளையம்மையையே சேரும். முதல் விடுதலை போராளியாக வரலாற்றில் அழைக்கப்படுகிறார்.
இருண்ட கண்டமான தென்னாப்பிரிக்காவில் வாழும் மக்களின் வாழ்வில் ஓளிப்பெற செய்த பங்கு வள்ளியம்மையையும் சேரும். வள்ளியம்மையிடம் இருந்த விடாபிடியான கொள்கையும், துணிச்சலும் ஒவ்வொரு பெண்ணிற்கும் அவசியமாந்து.


