கறிக்கடைக்குள் நுழைந்த ஆபீசர்.. திகைத்த சென்னை மட்டன் கடைக்காரர்!

Advertisements

சென்னை:

கெட்டுப்போன இறைச்சியை விற்றாலோ, அல்லது லைசென்ஸ் புதுப்பிக்கப்படாமல் இறைச்சி கடைகள் செயல்பட்டாலோ, அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்நிலையில், சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

2 வருடங்களுக்கு முன்பு, நாகப்பட்டினம் மாவட்டம், பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம் இல்லாமல் இறைச்சிக்கடையில் ஆடு, கோழிகள் வெட்டப்படுவதாகக் கூறி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உணவுக்காக விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்தும், விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தன்னுடைய மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதி தீர்ப்பு:

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகள் வெட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்களா? எனத் தெரிவிக்காததிலிருந்து, இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை என்றே கருத வேண்டியிருப்பதாகக் கூறி, விதிகளை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி, உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகளை வெட்டுபவர்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

தீவிர நடவடிக்கை:

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பிறகு, உணவுத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இறைச்சி கூடங்களில் அதிரடி ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். உரிமம் புதுப்பிக்காமல் இருந்தாலோ, அல்லது கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்வது தெரியவந்தாலோ, சம்பந்தப்பட்ட கடைகள்மீதும், அந்தந்த உரிமையாளர்கள்மீதும் நடவடிக்கையையும் எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், உரிமம் காலாவதியாகிவிட்டதாகச் சொல்லி, இறைச்சி கடையில் ரூ.13,000 பறிக்கப்பட்டுள்ளது… இப்படியொரு காரியத்தைச் செய்தது, உரிமம் ஆய்வாளர் என்பது அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.

கோழிக்கடை:

எர்ணாவூரில் கோழி மற்றும் மட்டன் கடையை வைத்திருப்பவர் சரத்ராஜன். இவர், நேற்று மாலை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார்.

இதற்குப் பிறகு சரத்ராஜன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, “எர்ணாவூரில் 5 வருடங்களாக இறைச்சி வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த மாதம் 21ம் தேதி, சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் வருவாய் பிரிவு, உரிமம் ஆய்வாளர் வீரமுனிநாதன் என்பவர், என்னுடைய கறிக்கடைக்கு வந்தார்.

இறைச்சி கடை லைசென்ஸ்:

அப்போது, இறைச்சி கடைக்கான லைசென்ஸ் முடிந்து விட்டதாகவும், லைசென்ஸ் இல்லாமலேயே இறைச்சி விற்பனை செய்ததற்காக, ரூ.13,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் சொன்னார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், ஜி-பே மூலம், அந்தப் பணத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன். பிறகு என்னுடைய கடையின் லைசென்ஸ் குறித்து நான் ஆய்வு செய்தபோது, மார்ச் 31ம் தேதிவரை எனக்கு லைசென்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

உடனே நான் இதைப் பற்றி வருவாய் பிரிவு அலுவலர்களிடம் கேட்டதற்கு, அவர்களும் எனக்குச் சரியான பதில் சொல்வில்லை. அதனால்தான் இப்போது உயர் அதிகாரியிடம் புகார் தந்துள்ளேன்” என்றார்.

கூகுள் பே:

இதனிடையே, சரத்ராஜன் அளித்த புகாரின்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து உதவி வருவாய் அலுவலர் அர்ஜூனன் சொல்லும்போது, “சம்பந்தப்பட்ட உரிமம் ஆய்வாளர் இப்போது லீவுல் இருக்கிறார். விடுப்பு முடிந்து அவர் வந்தவுடன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட உரிமம் ஆய்வாளர், கூகுள் பே மூலம் கறிக்கடைக்காரரிடமிருந்து பெற்ற ரூ.13 ஆயிரத்தில், ரூ.12 ஆயிரத்தை, ஜி-பே மூலம் இப்போதைக்கு திருப்பி அனுப்பியிருக்கிறாராம்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *