கால்பந்து அணி கேரளாவில் அடுத்த ஆண்டு விளையாடுகிறது!

Advertisements

திருவனந்தபுரம்: 

2025-ம் ஆண்டு லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் விளையாட உள்ளதாகக் கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தப் போட்டியை மாநில அரசு பொறுப்பேற்று நடத்தும் எனவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

உலகின் நம்பர் 1 கால்பந்தாட்ட அணியான அர்ஜெண்டினா, கேரளாவில் விளையாட உள்ளது. இதில் லயோனல் மெஸ்ஸியும் விளையாட உள்ளார். இந்த உயர்மட்ட கால்பந்து போட்டியை நடத்துவதற்கான அனைத்து நிதி உதவியையும் மாநில வர்த்தகர்கள் வழங்குவார்கள். இதுகுறித்த அறிவிப்பை அர்ஜெண்டினா அணி நிர்வாகம் அறிவிக்கும்.

அடுத்த ஒன்றரை மாத காலத்தில் அர்ஜெண்டினா அணி நிர்வாகக் குழுவைச் சேர்ந்தவர்கள் கேரளா வர உள்ளனர். இது தொடர்பாகக் கேரள அரசும், அர்ஜெண்டினா அணி நிர்வாகமும் கூட்டு அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளோம். அர்ஜெண்டினா அணியின் கேரளா வருகையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. போட்டி, பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகளைக் கேரள அரசு நேரடியாகக் கண்காணிக்கும்.

போட்டியை நடத்தும் தேதியை அர்ஜெண்டினா கால்பந்தாட்ட கூட்டமைப்பு அறிவிக்கும்.இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா உடன் விளையாடும் எதிரணி மற்றும் போட்டி நடைபெறும் மைதானம் ஆகியவை பின்னர் முடிவு செய்யப்படும். 50,000 பார்வையாளர்கள்வரை அமரக்கூடிய மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறும்.

அர்ஜெண்டினா அணிக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இதில் நான்கில் ஒரு பகுதியினர் கேரளாவில் உள்ளனர். இவ்வாறு அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *