Lok Sabha Election 2024: ஓட்டுக்குப் பணம் கொடுப்போர் மீது வழக்கு… தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

Advertisements

சென்னை; ”ஓட்டுக்குப் பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும்,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதும் குற்றம், அதை வாங்குவதும் குற்றம். ஓட்டுக்குப் பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகம், இரவு 10:00 மணிக்கு மேல் பிரசாரம் செய்தல் போன்றவை குறித்து, பொதுமக்கள், ‘சி விஜில்’ மொபைல் ஆப்ஸ் வழியாகப் புகார் அளிக்கலாம். தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க, பொதுமக்கள் முன் வர வேண்டும்.

இதுவரை பணம் கொடுத்ததாகப் புகார் வரவில்லை. ஒன்றிரண்டு புகார்கள் வந்தன; அவையும் பழைய வீடியோக்கள். தமிழகத்தில் பதற்றமான ஓட்டுச் சாவடிகளாக, 8,050; கண்காணிக்க வேண்டிய ஓட்டுச்சாவடிகளாக 181 கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்குக் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

வாக்காளர்களுக்கு, ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், 13.08 லட்சம் பேருக்குப் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வரும் 13ம் தேதிக்குள் வழங்கப்படும்.இவ்வாறு சத்யபிரதா சாஹுஅவர் கூறினார். .

தமிழகம் மந்தம்

நாடு முழுதும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து, பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக, ‘சி விஜில்’ மொபைல் ஆப், தேர்தல் கமிஷனால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வழியே புகார் அளிப்பது, தமிழகத்தில் மந்தமாகவே உள்ளது.நேற்று முன்தினம் வரை அதிகபட்சமாக, கேரளாவில் 71,168 புகார்கள் வந்துள்ளன.

இவற்றில், 70,929 புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும், 239 புகார்கள் நிலுவையில் உள்ளன.அதற்கு அடுத்தபடியாக, உத்தரகண்ட் மாநிலத்தில், 14,684; கர்நாடகாவில் 13,959; ஆந்திராவில் 7,055 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில், 2,168 புகார்கள் பெறப்பட்டதில், 2,139 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும், 29 புகார்கள் நிலுவையில் உள்ளன.தமிழகத்தை பொறுத்தவரை, கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 408 புகார்கள், அதற்கடுத்து சென்னையில் 239 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *