இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக ! அதிமுகவுக்கு அடித்த ஜாக்பாட்.!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு மரகதம் குமரவேல் மற்றும் திலகபாமா ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். ஆனால், தற்போது இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதையடுத்து, இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கும் நிலையில், செப்டம்பர் 16ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தவெகவும், அதிமுகவும் களமிறங்குவது உறுதியாகிவிட்ட நிலையில், திமுக மட்டும் இன்னும் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.

இதற்குக் காரணம் என்ன என்ற கேள்விதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஏனென்றால், தமிழ்நாட்டில் தவெக அமைப்பு ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்த இடைத்தேர்தல் திமுகவுக்கு ஒரு புதிய அரசியல் கணக்கை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்சி அமைத்து வெறும் 4 மாதங்கள்தான் ஆகும் நிலையில், மீண்டும் திமுக, அதிமுக, தவெக என மும்முனைப் போட்டி ஏற்பட்டால் அது ஆளுங்கட்சிக்கே சாதகமாக மாறிவிடக்கூடும் என திமுக தலைமை கணக்குப் போடுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெகவை தோற்கடிக்க முடிந்தால் விஜய்யின் அரசியல் பிம்பத்திற்கு பின்னடைவு ஏற்படுத்த முடியும் என திமுக கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால்தான், வாக்குகள் பிரிந்து தவெகவுக்கு சாதகமாக மாறுவதை தவிர்க்க, அதிமுகவுக்கு வழிவிட்டு திமுக ஒதுங்கி நிற்கலாமா என்ற ஆலோசனையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இதுவரை திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தற்போது தவெக பக்கம் நிற்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கூட்டணி கட்சிகளின் பலம் இல்லாமல் திமுக தனித்து களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம் என்ற திமுக தலைமையின் ஆலோசனைக்கு உதயநிதி ஸ்டாலின் உடன்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. தேர்தல் களத்தில் போட்டியிடாமல் ஒதுங்குவது சரியான அரசியல் முடிவாக இருக்காது என்பதே அவரது நிலைப்பாடாக கூறப்படுகிறது.

“விஜய்யின் பிம்பத்தை பார்த்து திமுக பயந்துவிட்டது… தவெகவை எதிர்கொள்ள திமுகவுக்கு தைரியம் இல்லை… அதனால்தான் தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்குகிறது” என்ற நரேட்டிவ்வை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கலாம் என்பதுதான் உதயநிதி ஸ்டாலினின் முக்கிய கவலையாக கூறப்படுகிறது. ஒருவேளை திமுக இந்த இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் களமிறங்க முடிவு செய்தால், மதுராந்தகம் தொகுதியில் விசிகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்த பனையூர் பாபுவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், திமுக தலைமை நிர்வாகிகளுடன் நாளை ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் வேட்பாளர்கள் யார்? தேர்தலை நேரடியாக சந்திப்பதா? அல்லது புறக்கணிப்பதா? என்ற முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது..

இதனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுகவின் இறுதி முடிவு என்ன? களத்தில் இறங்குமா? அல்லது அதிரடி முடிவெடுத்து ஒதுங்குமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது அறிவாலயத்தை சுற்றி அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *