TASMAC Liquor Price: கூடுதல் விலைக்கு மது விற்பனை.. 4 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்!

மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 4 கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் 4 பேரைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடிவரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. அரசுக்குப் பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயைப் பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையைக் குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி அரசு கடந்த மாதம் அறிவித்தது.

இந்த உத்தரவின் பேரில் பிப்ரவரி 1-ந்தேதி முதல் அனைத்து மதுபானங்களின் விலையும் அதன் அளவுக்கேற்ப விலை உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது. இதில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்கேற்ப ‘ஆப்’ பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன. எனவே அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மேலாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு 3 நாட்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுபான பாட்டில்களை அரசு நிர்ணயித்த விலையைவிட 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 4 கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களான சுரேஷ், பொன்முத்துமாரி, சக்தி மோகன், சுப்ரமணியன் ஆகிய 4 பேரைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *