தற்போதைய ஆட்சியில் யார் முதலமைச்சர் என்றே தெரியவில்லை : விளாசும் உதயகுமார்.!

தற்போதைய ஆட்சியில் யார் முதலமைச்சர், யார் நிர்வாகத்தை நடத்துவது என்றே தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் வகையில் தனியார் நிறுவனம் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்குத் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்குப் பின் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, 54 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட அதிமுக, ஏழை எளிய மக்களுக்காகவும் மீனவர்களுக்காகவும் என்றும் துணைநிற்கும் என்று கூறினார். அதிமுகவை அள்ளுச் சில்லு கட்சி என்று தமிழக முதல்வர் விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் நாகரிகமும், அனுபவமும், பாரம்பரியமும் இல்லாதவர்கள்தான் இப்படிப் பேசுவார்கள் என்று தெரிவித்தார். தற்போதைய ஆட்சி கையாலாகாத ஆட்சியாக உள்ளது என்றும் இந்த ஆட்சியில் யார் முதலமைச்சர், யார் நிர்வாகத்தை நடத்துவது என்றே தெரியவில்லை என்று விமர்சித்தார். பொதுமக்கள் தங்களின் குறைகளை யாரிடம் போய் சொல்வது என்றே தெரியாமல் தவித்து வருவதாகவும் மக்கள் விரைவில் இதற்கு நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *