அமெரிக்காவுடன் மோதலை தொடர விரும்பவில்லை – ஈரான் அறிவிப்பு!

அமெரிக்காவுடனான மோதலை தொடர நாங்கள் விரும்பவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை முடக்கும் வகையில், அமெரிக்கா கடந்த பிப்ரவரி முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்கி ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்குக் கப்பல்கள் மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக உலகளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, ‘மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என, சீனா வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சீனாவிற்குச் சென்றுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பீஜிங்கில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேசினார். அப்போது பேசிய வாங் யீ, ”ஈரான், அமெரிக்கா இரு நாடுகளும் மோதலை நீட்டிப்பது யாருக்கும் நன்மை தராது என்று கூறினார். இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, ஏற்கனவே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த அப்பாஸ் அராக்சி, ”அமெரிக்காவுடனான மோதலை தொடர நாங்கள் விரும்பவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தங்கள் உரிமைகளை பாதுகாத்தபடி, துாதரக வழியில் தீர்வு காண தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *