
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் நிலையம் புறநகர் ரயில் நிலையம் மாநகர பேருந்து சேவைகள் அனைத்தும் வரும் வரை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிச் செல்லும் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மையப்பகுதியாக அமைந்துள்ளதால் மெட்ரோ ரயில், புறநகர் ரயில், புறநகர் மற்றும் மாநகர பேருந்து சேவை, ஷேர் ஆட்டோ போன்ற அனைத்து விதமான இணைப்பு வசதிகளும் உள்ளதால் பொதுமக்கள் சுலபமாக வந்து செல்ல கோயம்பேடு வசதியாக உள்ளது.
கிளாம்பாக்கத்திற்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் வந்து செல்ல மெட்ரோ ரயில் புறநகர் ரயில் மாநகரப் பேருந்து சேவை போன்ற எந்த விதமான வசதிகளும் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்துவதற்கு இடம் அல்லது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பணிமனை கிடையாது. எனவே அனைத்து வசதிகளும் கிளாம்பாக்கத்திற்கு வந்து சேரும் வரை கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கு பொதுமக்கள் ஓலா,ஊபர் மற்றும் ஆட்டோ பயன்படுத்த ஆயிரம் ரூபாய் முதல் 1500 வரை செலவாகின்றது. ஜிஎஸ்டி சாலைக்கு எதிரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே கடந்து பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு பயணிகளும் பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
பேருந்தில் பயணிக்கும் 40% மக்கள் தாம்பரத்தை தாண்டி கிண்டி, அசோக் நகர், கோயம்பேடு வரக்கூடிய பயணிகளாக இருக்கிறார்கள். அவர்களின் வசதியை பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் மாநகரக்குள் ஆம்னி பேருந்துகள் வந்து செல்ல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களிடம் இருக்கிறது எனவே அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

