
பாஜகவில் இருந்து நடிகை கௌதமி விலகிய நிலையில், பெண்களை அரசியலில் ஊக்கப்படுத்த வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகை கௌதமி பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவந்தாக நேற்று அறிவித்திருந்தார். தனதுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அழகப்பன் என்பவர் மோசடி செய்ததாகவும், பாஜவை சேர்ந்த சிலர் அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியதுடன், கட்சியில் இருந்து மிகுந்த வேதனையுடன் விலகி கொள்வதாக தெரிவித்தார். இதனால் பாஜக கட்சியி சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கௌதமி புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அழகப்பன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கௌதமி பாஜகவில் இருந்து விலகியதாக கட்சி தலைமை விளக்கம் அளித்துள்ளது. இந்த சூழலில் பெண்களை அரசியலில் ஊக்கப்படுத்த வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், கௌதமி பாஜகவில் இருந்து விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ பெண்களை அரசியலில் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் அரசியலில் பணியாற்ற வாய்ப்பு கொடுக்க வேண்டும். கௌதமி நான் இருக்கும்போதே கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்தார். அவர் பந்தா இல்லாமல் நன்றாக பணியாற்ற கூடியவர். கௌதமியின் பிரச்சனையை தீர்த்து இருக்கலாம். ஆனால் ஏன் தீர்க்கப்படவில்லை என்று தெரியவில்லை. நான் இருக்கும் வரை என்னிடம் எந்த ஒரு புகாரும் வந்தது இல்லை. என்னிடம் புகார் வந்தால் நேரடியாக தீர்த்து வைத்திருப்பேன். கௌதமிக்கு கஷ்டப்படுகிறார், அவருக்கு பிரச்சனை இருக்கு, அவருக்கான நீதி கிடைக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.



