சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் திடீரென்று கண்கலங்கினார். அதன்பிறகு சில வினாடிகள் பேசாமல் நின்ற முதல்வர் கண்ணீரை துடைத்தபிறகு மீண்டும் பேசத் தொடங்கினார். முதல்வர் ஸ்டாலின் ஏன் கண்கலங்கினார்? சட்டசபையில் என்ன நடந்தது?. விரிவாகப் பார்க்கலாம்.
2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இன்றுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து இன்று வழக்கம்போல் காலை 9.30 மணிக்குத் தமிழக சட்டசபை தொடங்கியது.
இன்று கடைசி நாள் என்பதால் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். முதல்வர் ஸ்டாலின் பேசும்போது திடீரென்று கண்கலங்கினார். முதல்வர் ஸ்டாலின் பேசியது,
அரசு பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரி செல்ல முடியாத நிலையை மாற்றி உயர்கல்வி பயில உருவாக்கப்பட்ட திட்டம் தான் ‛புதுமை பெண்’ திட்டம். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய இந்தத் திட்டம் மூலமாக மாணவிகள் கல்லூரி வருவது 30 விழுக்காடு அதிகமாகி உள்ளது.
இதேபோல் ‛தமிழ் புதல்வன்’ திட்டம். மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். மாதந்தோறும் 2 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தி இருக்கிறோம்.
அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல. அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்களுக்கும் புதுமை பெண் திட்டத்தை விரிவுப்படுத்தி இருக்கிறோம்.
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ஒரு மாணவி பேசினார். என் குடும்பம் வறுமை காரணமாகக் கல்லூரி சென்று படிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. பணம் இல்லை.
அதனால் வேண்டாம் என்று என் அம்மா சொல்லிவிட்டார் என்று கூறினார். ‛புதுமை பெண்’ திட்டத்தைக் கேள்விப்பட்டு என் கல்லூரி செலவை நானே பார்த்துக் கொள்கிறேன் என்றதும் என் அம்மா சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் தினமும் பஸ்சில் போகனுமே? என்று சொன்னார். அதற்குத் தான் ‛விடியல்’ பயணம் இருக்கிறதே என்று நான் சொன்னேன். ஆக 2 திட்டங்களைப் பயன்படுத்தி கொண்டு நான் படித்து வருகிறேன் என்று சொன்னார். அந்த மாணவி சொன்ன சொற்கள் தான் விடியலுக்கான சாட்சி.
அதனால் தான் தமிழ்நாடு மாணவ-மாணவிகள் அப்பா… அப்பா என்று வாய்நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் இந்தப் பாச உணர்வு தான் முக்கியம்” என்று கூறி கண்கலங்கினார். அப்போது அவரது குரல் தழுதழுத்துப்போனது. சில வினாடிகள் பேச்சை நிறுத்தினார்.
அதன்பிறகு கண்களைத் துடைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பேசத் தொடங்கினார். அப்போது, ‛‛ஊட்டச்சத்தை உறுதி செய் என்று ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளோம்.
போதிய சத்து இல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம்மூலம் தீவிர ஊட்டச்சத்து உணவு என்பது வழங்கப்பட்டது. அதில் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இதில் 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளனர்.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள 6 மாதத்துக்கு உட்பட்ட 76,705 பச்சிளம் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டது.
இதனால் தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து இருக்காங்க. இதில் பயனடைந்த தாய், என் குழந்தை மிகக் குறைவான எடையுடன் தாய் பிறந்தது.
என்ன செய்யப்போறோம் என்று நினைத்தேன். குழந்தையை வளர்க்கும் அளவுக்கு என்னிடம் பணவசதி இல்லை. முதலமைச்சரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தால் நிறைய பொருட்கள் கிடைத்தது.
அதன்மூலம் நல்ல ஆரோக்கியத்துடன் என் குழந்தை வளர்ந்து உள்ளதாகச் சொன்னார். அந்தத் தாயின் கனிவான வார்த்தைகளில் விடியல் தெரிகிறது” என்றார்.