Supreme Court:போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் நாளை மாலைக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு!

Advertisements

கொல்கத்தா:கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடா்பாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையின்போது மேற்கு வங்காள அரசை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக சாடியது. முதல் தகவல் அறிக்கையை தாமதமாக பதிவு செய்தது, வன் முறை தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தது. டாக்டர்கள் பாதுகாப்பு தொடர்பாக 10 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.

கடந்த விசாரணையின்போது பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணத்தை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறித்து மேற்கு வங்காள போலீசை சாடியது.

இந்த நிலையில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் தொடங்கியது.

சி.பி.ஐ. தனது விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது. இதுவரை என்ன விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணை விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை தனது அறிக்கையில் சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.

இதேபோல மேற்கு வங்காள அரசின் சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘டாக்டர்கள் போராட்டத்தில் 23 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த 2 அறிக்கையை வைத்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை தொடங்கியது. பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து எப்போது பதிவு செய்யப்பட்டது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பிற்பகல் 2.55 மணிக்கு பதிவு செய்யப்பட்டது என்று, இறப்பு சான்றிதழ் 1.45 மணிக்கு வழங்கப்பட்டது என்றும் மேற்கு வங்காள அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபில் தெரிவித்தார். வீடியோ பதிவுகள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதா? என்றும் தலைமை நீதிபதி கேட்டார்.

சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது ‘பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பான தடயவியல் மாதிரிகள் மேற்கு வங்காளத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடயவியல் மாதிரிகளை அனுப்ப விசாரணை நிறுவனமான சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது என்றார்.

இதை தொடர்ந்து வரு கிற 17-ந்தேதி விசாரணையின் புதிய நிலை அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *