
செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள இருளர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சின்னபையன்.
இவரது மகன் ராமு (24) இவருக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. ராமுவும் அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கையான சரளா என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ராமுவின் திருமணத்திற்கு முன்பிலிருந்தே இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்து வைத்தால் சரளாவை விட்டு மீண்டு விடுவானென ராமுவின் பெற்றோர் ராமுவிற்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஓரிரு மாதங்கள் சரளாவுடன் பழகாமல் பேசாமல் இருந்து வந்த ராமு மீண்டும் திருநங்கைக சரளாவுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் ராமு மனைவியிடம் சரிவர அன்பு காட்டவில்லை. இதுகுறித்து ராமுவின் மனைவி திருநங்கை சரளாவையும் தனது கணவர் ராமுவையும் கண்டித்துள்ளார்.
சரளாவின் பழக்கத்தை விட்டொழிக்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் ராமுவும் அவரது திருநங்கை காதலி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்
இந்நிலையில் பழவேலி பாலாற்றங்கரையில் ஒரு மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


