Suicide: திருமணமான 6 மாதத்தில் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை!

Advertisements

திருச்சியில் காதல் திருமணம் செய்து கொண்ட தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்துள்ள எட்டரை கிராமம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஜப்பிரியா (வயது 35). இவர், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலமாகத் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த  கார்த்திக் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரைக் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கார்த்திக் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் காதல் விவகாரம் குடும்பத்திற்கு தெரிய வரவே குடும்பத்தினருக்கு தெரியாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவலர் குடியிருப்பில் இருவரும் சந்தோஷமாகக் கடந்த ஆறு மாதமாகக் குடும்ப நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கஜப்பிரியா கணவனைப் பிரிந்து திருச்சியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில்  கஜப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர், கதவு  உள்புறம் தாழிடப்பட்டு இருந்ததைக் கண்டு மகளைப் பலமுறை அழைத்துள்ளனர்.

ஆனால், வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் பிணமாகத் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து திருச்சி மாவட்டம் சோமரசன் பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து சென்று கஜப்பிரியா உடலைக் கைப்பற்றித் திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தற்கொலை செய்து கொண்ட கஜப்பிரியாவும், காவலர் கார்த்தியும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *