
நான் இன்று காலை எழுந்தவுடன் கேள்விப்பட்ட ஒரு செய்தி பிரபல தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் மற்றும் நடிகரின் மகளான பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி. உடனே அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் என்னையும் என் மனதையும் ஆஸ்வாசப்படுத்தி அமைதியாக உட்கார்ந்து எதற்காகத் தற்கொலை செய்து கொள்கிறார்? அதுவும் இன்றைய காலகட்டத்தில் நிறைய தற்கொலைகள் அரங்கேற காரணநகள் என்னவாக இருக்கும் என்று யோசிக்க தொடங்கினேன்.
அப்பொழுது என் மனதிற்கு தோன்றிய ஒரு விஷயம் இவ்வுலகில் இறைவன் இயற்கையை படைத்திருக்கிறார். ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளை படைத்திருக்கிறார். ஆறறிவு கொண்ட மனிதர்களாகிய நம்மையும் படைத்திருக்கிறார். இப்படி கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களும் இயற்கையாக மரணிக்க வேண்டும் என்பதே இயற்கையின் நியதி.
ஒரு தாயின் வயிற்றில் கருவாக உருவாகி குழந்தையாகப் பிறக்கிறோம். பின்னர் காலத்தோடு சேர்ந்து நாமும் வளர்ந்து வாழ்க்கையை வாழத் தொடங்குகிறோம். அப்படி நாம் வாழும் இந்த வாழ்க்கையில் கஷ்டம், நஷ்டம், இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, வெறுப்பு, சந்தோஷம், சகிப்பு, சிரிப்பு, அழுகை என்று பலதரப்பட்ட உணர்வையும் எதிர்கொள்வோம் இப்படி பல உணர்வுகளை எதிர்கொள்ளும் நம் உடலில் உள்ள இந்த மனதிற்கு வடிவம் உண்டா? உருவம் உண்டா?

ஒரு காலத்தில் 50 -60 வயதுக்கு மேற்பட்டவர்களும் வேலைக்குச் செல்பவர்களும் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும் மன அழுத்தம் மனசோர்வு என்ற வார்த்தையைச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கும். ஆனால் இன்றைய அறிவியலும் விஞ்ஞானமும் வளர்ந்து வரும் உலகில் கல்லூரி மாணவ மாணவிகளும் பள்ளி மாணவ மாணவிகளும் ஏன் குழந்தைகளுக்குக் கூட மனது கஷ்டமாக இருக்கிறது, மனம் வலிக்கிறது, ஸ்ட்ரெஸ்சாக இருக்கிறது, டிப்ரஷன் ஆக இருக்கிறது, என்று சொல்வதை பார்க்கிறோம்.
இப்படி கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைகள் மன அழுத்தத்திற்கும் சோர்வுக்கும் பாதிக்கப்படுவதற்கு காரணம் என்னவாக இருக்கும்? இன்றைய கல்வி முறைகள் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக் காரணமாக இருக்கிறதா? அவர்கள் வளரும் வீட்டு சூழ்நிலை அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறதா? பெற்றோர்களின் கவன குறைவா? உலக அளவில் மனிதருக்கு ஏற்படும் பிரச்சனைகளில் முதலிடத்தில் இருப்பது மன அழுத்தம் என்று சொல்கிறார்களே. மன அழுத்தம் ஒரு நோயா, மன அழுத்தம் என்றால் என்ன? என்பதை பார்க்க இருக்கிறோம்.

மாணவச் செல்வங்கலே இந்த வாழ்க்கை விசித்திரமானது மட்டுமல்ல சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் வாழ்வில் வாடிக்கை தான். சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும், உண்மையை எதிர்கொள்ளும்போது, வாழ்வின் ஏமாற்றத்தையும் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும், தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்கு நிலைக்குத் திரும்பி விடும்.
நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது ஆனால் நாளையை உருவாக்க முடியும். மாணவர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற தடைகளைத் தன்னம்பிக்கையோடு தகர்த்தெறிய வேண்டும்
பெற்றோர்களாகிய உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களுக்கு நண்பர்களாக இருங்கள். அவர்களின் அதிகப்படியான மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து அதை எவ்வாறு போக்குவது என்பதை கற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் பிள்ளைக்கு மன அழுத்தம் நிறைந்த காலங்களில் நீங்கள் உதவலாம்.

பொதுமக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா ? மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தாமாகவே முன்வந்து தமது பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசி, உதவி கோரும் அளவுக்கு ஓர் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும்.இந்தப் பொறுப்பை நாம் அனைவரும் உணர்ந்தால், மன அழுத்தத்தால் களையிழந்த வாழ்வுக்கு மீண்டும் நம்மால் உயிர் கொடுக்க முடியும். உயிர் கொடுப்போம்!!! வாருங்கள்!!!
இது ஒரு சமூக விழிப்புணர்வுக்கான கருத்து.

