Suicide: மருமகள் இறந்த துக்கத்தில் மாமியார் விஷம் குடித்து தற்கொலை!

Advertisements

மருமகள் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீன்சுருட்டி: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி தாலுகா, நெடுஞ்சேரி புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் ரஞ்சிதாவுக்கும் (வயது 24), அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் மணிவண்ணனுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மணிவண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.

வானவநல்லூரில் உள்ள வீட்டில் ரஞ்சிதா தனது மாமனார், மாமியார் மணிமேகலை(54) ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 27-ந்தேதி குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாதபோது ரஞ்சிதா தனது துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மணிவண்ணன் ஊருக்குத் திரும்பி வந்தார்.

இந்நிலையில் மணிவண்ணன், மணிமேகலை ஆகியோர் ரஞ்சிதா இறந்த துக்கம் தாங்காமல் கடந்த 3 நாட்களாகச் சாப்பிடாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணமூர்த்தி, மணிமேகலை, மணிவண்ணன் ஆகியோர் வீட்டில் தூங்கியதாகத் தெரிகிறது.

நேற்று அதிகாலை 2 மணியளவில் எழுந்து பார்த்தபோது மணிமேகலையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தியும், மணிவண்ணனும் அக்கம் பக்கத்தில் மணிமேகலையை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் அவர்கள் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது வைக்கோல் போர் அருகே மணிமேகலை மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு மணிமேகலையை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசெல்வன் வழக்குப்பதிவு செய்து, மணிமேகலையின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், மணிமேகலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருமகள் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *