இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் – அன்புமணி!

Advertisements

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண மத்திய அரசுக்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 5 விசைப்படகுகள் சிங்கள கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்களுக்கு எதிராகச் சிங்கள கடற்படையினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் மீனவர்கள் வங்கக் கடலில் எல்லையை மீறி மீன்பிடிக்கும் விவகாரத்தை வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மனிதநேய பிரச்சினையாகக் கருத வேண்டும் எனக் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற இந்தியா – இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் நடத்திய உரையாடல்களில் இதே கருத்து முன்வைக்கப்பட்டது.

எனினும், சிங்கள கடற்படையினர் இதனை மதிக்காமல், தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லையை மீறியதாகக் கூறி, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கமாக மாறியுள்ளது. இது இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஒரு சவாலாகும்.

தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்கள படையினரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசை வலியுறுத்தி மீனவர்களின் சிக்கலுக்கு நிலையான தீர்வைக் காண தமிழக அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு இந்த விவகாரத்தை இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான தாக்குதலாகக் கருதி, இலங்கை அரசுக்குக் கடுமையான எச்சரிக்கைகளை வழங்க வேண்டும்.

இந்தியா – இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை உடனடியாக மீண்டும் நடத்தி, தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பது குறித்து விவாதிக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *