Sivagangai: நாட்டை உலுக்கிய அஜித்குமார் படுகொலை: பரபரப்பு தகவல்கள்.!

Advertisements
அஜித் குமார் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தோண்ட தோண்ட பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கொலை வழக்கில் நான்கு காவலர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவசர அவசரமாக மேலிட உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைத்த துணை போலி சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணி இடை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறார்.
 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். ஏன் இந்த பாரபட்சம்!? இந்த படுகொலைக்கு மூல காரணமாக அமைந்த டெலிபோன் உத்தரவுகள் பற்றியும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிவகங்கை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தற்போது டெல்லியில் பணிபுரிந்து வருகிறார்.
அவரிடமிருந்து தொடங்கி தமிழக தலைமைச் செயலகம் மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி என இந்த பட்டியல் தொடர்கிறது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை?. புகார் கொடுத்த தில்லாலங்கடி மோசடி ராணி நிகிதா 20 ஆண்டுகளுக்கு முன்பு எல்லா வகையான மோசடிகளிலும் ஈடுபட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்ட தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக கல்யாண ராணியாக அவர்செய்த மோசடிகள்.. இந்த வலையில் முதலில் சிக்கியவர் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் தொழில் அதிபர். நிச்சயதார்த்தத்துடன் 10 லட்சம் ரூபாயை கறந்து அந்த திருமணம் நிறுத்தப்பட்டது. அது இல்லாமல் வேலை வாங்கி தருவதாக தனது பேராசிரியர் மட்டுமின்றி தன்னிடம் படித்தவர்களிடமே எக்கச்சக்கமான மோசடி!
ஆனால் இந்த படுகொலைக்கு மூல காரணமாக விளங்கிய நிகிதாவும் சூனியக்காரி போல் தோற்றமளிக்கும் அவருடைய தாயாரும் மிக சாவகாசமாக கொலை நடந்த இடத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உலா வருகிறார்கள். இது எப்படி சாத்தியமானது? கோவையில் அவர்களை  மடக்கிய இளைஞர்கள் போலீசுருக்கு தகவல் கொடுத்தும் அவர்களை சுதந்திரமாக விட்டது எப்படி!?
இதற்கு இடையில் தாவரவியல் பேராசிரியராக தான் பணிபுரிந்த திண்டுக்கல் அரசு கல்லூரியில் போய் பணியில் சேர்ந்து மருத்துவ விடுப்பில் சென்றிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இடை இடையே ஊடகத்தில் அவருடைய உருக்கமான பேட்டிகளும் வருகின்றன. கண்ணீர் மல்க தாயும் மகளும் அஜித்குமாரை மகனே என்று உருகுகிறார்கள்.
நகை திருட்டு போனது என்பதே பொய்யான தகவல் என்கிறார்கள். அஜித் குமாரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே மோசடியாக அந்த புகார் கூறப்பட்டு அதன் அடிப்படையில் இவ்வளவு சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளது.
இவர்கள் மீது எல்லாம் என்ன நடவடிக்கை!? பொதுவாக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்பக்கூடாது என்று எதிர்ப்புகள் எழுந்தன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு 7 ஆண்டுகளாகவும் சாத்தான்குளம் பெனிக்ஸ் தந்தை மகன் கொலை வழக்கு ஐந்து ஆண்டுகளாகவும் நடந்து வருவது இதற்கு காரணம்.
ஆனாலும் இந்த விவகாரத்தில் அந்த மடப்புரம் பத்ரகாளி அம்மனே நீதி வழங்க வந்தது போல் மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். சிபிஐ தனது விசாரணையை ஒரு மாதத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதன் மூலம் சற்று நம்பிக்கை ஒளி பிறந்திருக்கிறது..
இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு தகவல். மாவட்ட எஸ் பி யாக இருப்பவருக்கு இந்த சம்பவம் எல்லாம் நடந்து முடிந்து அஜித் குமார் கொல்லப்பட்ட பிறகு தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது வேதனை.பொதுவாகஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் ஐஎஸ் என்று சொல்லக்கூடிய சிறப்பு புலனாய்வு போலீசார் பணியில் அமர்த்தப்படுவது உண்டு.
வெள்ளைக்காரன் காலத்தில் அமைந்த சிஸ்டம் இது! ஆனால் அந்த போலீசாரை காவல் நிலைய அதிகாரிகள் சரி கட்டி விடுவதால் சில தகவல்கள் எஸ்பிக்கு நேரடியாக செல்வது கிடையாது. இதனால் நாங்கள் பத்திரிகையாளராக பணிபுரிந்த அந்த காலத்தில் எஸ் பி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தங்களுக்கென்று தனியாக ஒரு உளவாளி வைத்திருப்பது வழக்கம். இப்போது உள்ள எஸ்பிக்கள் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்களா!?
சிறப்பு செய்தியாளர்  க. செந்தூர் பாண்டியன்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *