
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா குறித்த ஆளுநரின் பரிந்துரைகள் நிராகரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னை தலைமைச்செயலகத்தில் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, பொதுமக்களின் கருத்தை கேட்டறிந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் பல கட்டங்களில் பரிசீலிக்கப்பட்டு, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவின் அச்சடிக்கப்பட்ட பிரதி ஆளுநருக்கு இணைத்து அனுப்பப்பட்டது எனக் கூறினார்.
ஆளுநர் அரசமைப்பு சட்டத்தின்படி பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல், சட்டமுன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளதாக முதல்வர் கூறினார்.
இது அரசியல் சட்டத்திற்கும், நமது சட்டப்பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழிய அதிகாரம் உள்ளது எனவும் ஆளுநரிடம் இருந்து வரப்பெற்றுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடியது என்றும் அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது என்னும் தீர்மானத்தை முன்மொழிவதாகத் தெரிவித்தார்.
மேலும், உறுப்பினர்கள் அனைவரும் இதனை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டார்.
இதை தொடர்ந்து, முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



