கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும்போது ஏற்படும் இறப்புக்கு உரிமையாளரே பொறுப்பு- ஹைகோர்ட்!

Advertisements

சென்னை:

தனியார் கட்டிய கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும்போது பணியாளர் இறக்க நேரிட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் முழு பொறுப்பு என்றும் அவர்தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை விநாயகபுரத்தை சேர்ந்த யோகேஷ் என்பவர் ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பது, விநாயகபுரம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு இல்லை. சென்னை மாநகராட்சிக்குப் பலமுறை மனுக்கள் அனுப்பியும் இணைப்பு வசதி வழங்கவில்லை.

இதையடுத்து சொந்த செலவில் கழிவு நீர் தொட்டி கட்டினேன். மாநகராட்சி ஊழியர்கள் வந்து அவ்வப்போது நிரம்பிய கழிவுநீரை அகற்றுவர். அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி மாநகராட்சி 3ஆவது மண்டல ஊழியர்கள், வீட்டில் நிரம்பிய கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மது அருந்தி இருந்த முனுசாமி என்ற ஊழியர், கழிவு நீர் தொட்டியில் திடீரென ஆழமான பகுதிக்குள் இறங்கினார். மற்ற ஊழியர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

விஷ வாயுவால் முனுசாமி மூச்சுத்திணறி இறந்தார். இந்தச் சம்பவம்குறித்து அதிகாரிக்குத் தகவல் கொடுத்தேன். முதல் கட்டமான கருணை அடிப்படையில் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ. 55 ஆயிரம் இழப்பீடாகக் கொடுத்திருந்தேன்.

பின்னர் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும்படி சென்னை மாநகராட்சி 3ஆவது மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எங்கள் பகுதி முழுவதும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால்தான் கழிவு நீர் தொட்டி கட்டினோம்.

முனுசாமியின் இறப்பு துரதிருஷ்டவசமானதுதான். என் சொந்த பணத்தை முனுசாமியின் மனைவியிடம் வழங்கினேன். இந்த நிலையில் முழு இழப்பீட்டுத் தொகையையும் கொடுக்கும்படி மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது முரணாக உள்ளது.

எனவே அவர் எனக்கு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனியாரின் கழிவுநீர் தொட்டியில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பு.

அவர்தான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தர வேண்டும்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த விதிகளின்படியே மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என வாதத்தை முன் வைத்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார்.

எனவே உரிய விதிகளின் அடிப்படையில்தான் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி இழப்பீட்டு தொகையைப் பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் கொடுத்துள்ளது.

எனவே அந்தத் தொகையை மனுதாரரிடம் வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாமென உத்தரவிட்டு மனுதாரரின் மனுவை ஹைகோர்ட் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *